தூத்துக்குடியில் வர்த்தக கண்காட்சி புதன்கிழமை தொடங்குகிறது

தூத்துக்குடியில் வர்த்தக கண்காட்சி புதன்கிழமை தொடங்குகிறது

Update: 2023-07-25 18:45 GMT

வர்த்தக கண்காட்சி மற்றும் பொருட்காட்சித் தலைவர் ஜி.பி. ஜோ பிரகாஷ், அகில இந்திய வர்த்தக தொழில் சங்கத் தலைவர் டி.ஆர்.தமிழரசு ஆகியோர் நிருபர்களிடம் கூறியதாவது:-

தூத்துக்குடி முத்துநகர் கடற்கரை அருகே வர்த்தகக் கண்காட்சி மற்றும் பொருட்காட்சி இன்று (புதன்கிழமை) முதல் அடுத்த மாதம் (ஆகஸ்ட்) 26-ந் தேதி வரை நடக்கிறது. இந்த கண்காட்சியை சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் தொடங்கி வைக்கிறார். வர்த்தகம் தொடர்பான கண்காட்சியில் 72 அரங்குகளும், பெண்களுக்கான அழகு சாதனப் பொருள்கள் உள்ளிட்டவற்றுக்கு 38 அரங்குகளும் அமைக்கப்பட்டு உள்ளன. உள்ளூர் உணவு வகைகளுக்கு தனித்தனி அரங்குகள் அமைக்கப்பட்டு உள்ளன. வெளிநாட்டுப்பறவைகள் கண்காட்சியில் வைக்கப்படுகின்றன.

மேலும், குழந்தைகளுக்கான விளையாட்டு அரங்குகள், ராட்டினங்கள் உள்ளிட்ட பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்து உள்ளன. இதற்கு ஒரு நபருக்கு வார நாள்களில் ரூ.50, சனி, ஞாயிறு ரூ.70 நுழைவுக்கட்டணமாக வசூலிக்கப்படும். மேலும் வரும் 29-ந் தேதி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, வர்த்தக கண்காட்சியை பார்வையிடுகிறார். அன்றைய தினத்தில் அகில இந்திய வர்த்தக தொழில் சங்கத்தின் 40-வது ஆண்டு விழா மலர் வெளியிடப்பட உள்ளது. இந்த நிகழ்ச்சியில், மேயர் ஜெகன் பெரியசாமி, தொழில் அதிபர் முத்து உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர்.

மேலும் வணிகர்கள் தங்கள் தயாரிப்புகள், சேவைகள், புதுமைகள் ஆகியவற்றை பார்வையாளர்களுக்கு காட்சிப்படுத்த இந்த கண்காட்சி உறுதுணையாக இருக்கும். இது பொதுமக்களையும், வணிகர்கள், தொழில்முனைவோர் ஆகியோரை இணைக்கும் பாலமாக இருக்கும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags:    

மேலும் செய்திகள்