பசுமாட்டை அடித்து கொன்று இழுத்து சென்ற புலி

செங்கோட்டை அருகே புலி ஒன்று ஊருக்குள் புகுந்து பசுமாட்டை அடித்து கொன்று இழுத்து சென்றுள்ளது.

Update: 2023-04-03 18:45 GMT

செங்கோட்டை:

செங்கோட்டை அருகே உள்ள தமிழக-கேரள எல்லைப்பகுதியில் இருக்கும் கேரளா மாநிலம் ஆரியங்காவு ஆரேக்கர் பகுதியைச் சேர்ந்தவர் தங்கையா (வயது 50). இவர் பசு மாடுகள் வளர்த்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு தனது வீட்டின் முன்பு உள்ள தொழுவத்தில் 3 பசு மாடுகளை கட்டி போட்டு இருந்தார். அப்போது வனப்பகுதியில் இருந்து ஊருக்குள் புகுந்த புலி ஒன்று ஒரு பசுமாட்டை அடித்துக் கொன்று உள்ளது. மேலும் 2 பசுமாடுகளை தாக்கி உள்ளது. இதில் அவை காயம் அடைந்தன. பின்னர் அந்த புலி, இறந்த பசுமாட்டை இழுத்து சென்றது. இந்த காட்சிகள் அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் வனச்சரகர் ராஜேஷ் மற்றும் வனத்துறையினர் சம்பவ இடத்தை பார்வையிட்டு கண்காணித்து வருகின்றனர். தற்போது கோடை காலம் என்பதால், குடிநீர் மற்றும் உணவுக்காக வனவிலங்குகள் குடியிருப்பு பகுதிக்குள் வரலாம் என்றும், புலி நடமாட்டம் இந்த பகுதியில் தொடர்ந்து இருந்தால் தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, மேல் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இதற்கிடையே அந்த புலியை கூண்டு வைத்து பிடிக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்