மதுபோதையில் பெண் போலீசிடம் தகராறில் ஈடுபட்ட வாலிபர்

சப்-இன்ஸ்பெக்டர் ரேணுகாவை யோகேஷ் என்ற வாலிபர் தகாத வார்த்தையால் திட்டி தகராறில் ஈடுபட்டார்.

Update: 2024-06-28 07:00 GMT

ஈரோடு,

ஈரோடு மாவட்டம் மேட்டூர் ரோடு முனிசிபல் காலனி பிரிவில் சம்பவத்தன்று ஸ்கூட்டரில் 3 வாலிபர்கள் வந்தனர். அப்போது, அங்கு போக்குவரத்தை ஒழுங்குப்படுத்தும் பணியில் இருந்த வடக்கு போக்குவரத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரேணுகா, அவர்களை மடக்கி பிடித்தார்.

அப்போது அந்த வாலிபர்கள் மதுபோதையில் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து ஸ்கூட்டரை ஓட்டி வந்த வாலிபரிடம் லைசன்ஸ், ஆர்.சி. புக் உள்ளிட்ட ஆவணங்களை கேட்டுள்ளார். இதற்கு மதுபோதையில் இருந்த வாலிபர்கள், ரேணுகாவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் ரேணுகாவை யோகேஷ் என்ற வாலிபர் தகாத வார்த்தையால் திட்டி தகராறில் ஈடுபட்டார். தொடர்ந்து யோகேஷ் சட்டையை கழற்றி ரோட்டில் படுத்து உருண்டார்.

வாலிபரின் செய்கையை செல்போனில் படம் பிடிக்கவும், தகவல் கூறி கூடுதல் போலீசாரை வரவழைக்கவும் பாக்கெட்டில் இருந்த தனது செல்போனை ரேணுகா எடுத்துள்ளார். அப்போது, யோகேஷ் அதை தட்டி விட்டதாக தெரிகிறது. இதைத்தொடர்ந்து மதுபோதையில் ஸ்கூட்டரை ஓட்டி வந்ததாக யோகேஷ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மேலும் இதுகுறித்து சப்-இன்ஸ்பெக்டர் ரேணுகா ஈரோடு அரசு ஆஸ்பத்திரி போலீசில் புகார் அளித்தார்.

அதன்பேரில் யோகேஷ் மீது பொது இடத்தில் அநாகரீகமாக நடந்து கொள்ளுதல், அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல் உள்பட 3 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். பின்னர் அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்