பணம் செலுத்தும் எந்திரத்தில் இருந்த ரூ.50 ஆயிரத்தை ஒப்படைத்த வாலிபர்

கள்ளக்குறிச்சி ஏ.டி.எம். மையத்தில் பணம் செலுத்தும் எந்திரத்தில் இருந்த ரூ.50 ஆயிரத்தை ஒப்படைத்த வாலிபர் உரியவர்கள் பணத்தை பெற்றுச்செல்லலாம் என போலீசார் அறிவிப்பு

Update: 2023-02-25 18:45 GMT

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் தாலுகா அக்கராயப்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் செந்தில்முருகன்(வயது 32). இவர் நேற்று முன்தினம் இரவு கள்ளக்குறிச்சி-சேலம் மெயின் ரோட்டில் உள்ள தனியார் வங்கியின் ஏ.டி.எம். மையத்தில் பணம் எடுக்க சென்றார். அப்போது அங்குள்ள பணம் செலுத்தும் எந்திரத்தில் பணம் எடுக்க முயன்றபோது அவருக்கு ஆச்சரியம் காத்திருந்தது. ஆம், செந்தில்முருகன் எதிர்பார்த்த தொகைக்கு மாறாக எந்திரத்தில் ரூ.50 ஆயிரம் இருந்ததை கண்டு வியப்படைந்தார். பின்னர் விசாரித்தபோது முன்னதாக டெப்பாசிட் செய்ய வந்தவர்கள் பணத்தை சரியான முறையில் எந்திரத்தின் உள்ளே செலுத்தாமல் சென்று விட்டதால் அந்த பணம் எந்திரத்திலேயே இருந்தது தொியவந்தது. இதையடுத்து செந்தில்முருகன் அந்த பணத்தை எடுத்துக்கொண்டு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் உள்ள தனிப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகத்திடம் ஒப்படைத்து நடந்த சம்பவத்தை தெரிவித்தார். இதையடுத்து ஏ.டி.எம். எந்திரத்தில் பணத்தை தவற விட்டு சென்ற நபர் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் பணத்துக்குரிய நபர்கள் உரிய ஆவணங்களை காட்டி பணத்தை பெற்று செல்லலாம் என போலீசார் தெரிவித்துள்ளனர். ஏ.டி.எம். மையத்தில் பணம் செலுத்தும் எந்திரத்தில் உள்ளே செல்லாமல் இருந்த ரூ.50 ஆயிரத்தை ஒப்படைத்த செந்தில்முருகனின் நேர்மையை போலீசார் பாராட்டியதோடு, பொதுமக்களிடம் இருந்தும் அவருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்