'சூரியன் மறைந்திருக்கிறது, மழையில் குளங்கள் நிரம்பி தாமரை மலரும்' - தமிழிசை சவுந்தரராஜன்

தற்போது சூரியன் மறைந்து மழை பெய்து வருவதால் குளங்கள் நிரம்பி தாமரை மலரும் என தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.

Update: 2024-05-16 12:34 GMT

Image Courtesy : @DrTamilisai4BJP

சென்னை,

சென்னை மயிலாப்பூர் சட்டமன்ற தொகுதி பா.ஜ.க. நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட தண்ணீர் பந்தலை தென்சென்னை நாடாளுமன்ற தொகுதி பா.ஜ.க. வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜன் இன்று திறந்து வைத்தார். இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசியபோது அவர் கூறியதாவது;-

"கடந்த சில நாட்களாக வெயில் அதிகமாக இருந்ததால் தண்ணீர் பந்தலை திறந்தோம். ஆனால் இன்று மழை பெய்துள்ளது, இருந்தாலும் மக்களுக்கு சூடான சாப்பாடு வழங்கியிருக்கிறோம். நாங்கள் அனைத்திற்கும் தயாராகவே இருந்தோம். நாம் தண்ணீர் கொடுப்பதற்கு பதிலாக வானமே தண்ணீர் கொடுப்பதில் மிக்க மகிழ்ச்சி.

சூடு தணிய வேண்டும், மக்கள் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்பதே நமது விருப்பம். தற்போது சூரியன் மறைந்திருக்கிறது, மழை பொழிகிறது. மழை பெய்தால் குளங்கள் நிரம்பி தாமரை மலரும். அந்த வகையில் எனக்கு மகிழ்ச்சிதான்.

இன்று டெங்கு தினம். சனாதனத்தை டெங்கு போல் ஒழிப்போம் என்றார்கள், ஆனால் டெங்குவையே இன்னும் ஒழிக்கவில்லை. 10 மாவட்டங்களில் டெங்கு காய்ச்சல் அதிகரித்துள்ளது. அரசு உடனடியாக தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும். மழைக்காலங்களில் மக்கள் பாதுகாப்பாக இருப்பதை அரசாங்கம் உறுதி செய்ய வேண்டும்."

இவ்வாறு தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார்.

Full View
Tags:    

மேலும் செய்திகள்