கரும்பு வெட்ட சர்க்கரை ஆலை நிர்வாகமே ஆட்களை அனுப்பி வைக்க நடவடிக்கை- கலெக்டர் உறுதி
பெரம்பலூர் மாவட்டத்தில் கரும்பு வெட்டுவதற்கு சர்க்கரை ஆலை நிர்வாகமே ஆட்களை அனுப்பி வைக்கும் சோதனை முயற்சியை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும், என்று முத்தரப்பு கலந்தாய்வு கூட்டத்தில் கலெக்டர் கற்பகம் தெரிவித்தார்.
முத்தரப்பு கலந்தாய்வு கூட்டம்
கரும்பு வெட்டு கூலியினை நிர்ணயம் செய்வது தொடர்பாக பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் சர்க்கரை ஆலைகளின் அலுவலர்கள், கரும்பு விவசாயிகள், கரும்பு வெட்டும் தொழிலாளர்களுடனான முத்தரப்பு கலந்தாய்வு கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் கற்பகம் தலைமை தாங்கினார்.
கூட்டத்தில் கரும்பு விவசாயிகள், கரும்பு வெட்டும் தொழிலாளர்களின் கோரிக்கைகளை கலெக்டர் விரிவாக கேட்டறிந்தார். பின்னர் கலெக்டர் கற்பகம் பேசுகையில், கரும்பு விவசாயிகளும், கரும்பு வெட்டும் தொழிலாளர்களும் தங்களின் கோரிக்கைகளை முன்வைத்துள்ளீர்கள். உங்கள் கோரிக்கைகள் முழுமையாக பரிசீலிக்கப்படும்.
தீ வைத்து விட்டு...
சர்க்கரை ஆலைக்கு கரும்பினை வழங்க வரும் விவசாயிகளையும், கரும்பு ஏற்றி வந்த லாரிகள், டிராக்டர்களையும் அதிக நேரம் காக்க வைக்காமல் கரும்பு வெட்டப்பட்ட 24 மணி நேரத்திற்குள் ஆலைக்குள் கொண்டு செல்ல தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும். கரும்பு வெட்டும் போது வயலுக்கு தீ வைத்து விட்டு வெட்டுவது தவிர்க்கப்பட வேண்டும். இதனால் கரும்பின் தரம் பாதிக்கப்படும். மேலும், விவசாயிகளின் கோரிக்கையினை ஏற்று கரும்பு வெட்டுவதற்கு ஆலை நிர்வாகமே ஆட்களை அனுப்பி வைக்கும் நடைமுறையினை சோதனை முயற்சியாக மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.
இதில் எறையூரில் உள்ள பெரம்பலூர் அரசு சர்க்கரை ஆலையின் தலைமை நிர்வாகி ரமேஷ், உடும்பியம் தனலட்சுமி சீனிவாசன் சர்க்கரை ஆலையின் செயல் இயக்குனர் சின்னப்பன் மற்றும் கரும்பு விவசாயிகள், பிரதிநிதிகள், கரும்பு வெட்டும் தொழிலாளர்கள், டிராக்டர் உரிமையாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.