ஜனவரி மாதம் 21-ந் தேதி முதல் கள் இறக்கும் போராட்டம்-நல்லசாமி பேட்டி

தமிழகம் முழுவதும் ஜனவரி மாதம் 21-ந் தேதி முதல் கள் இறக்கும் போராட்டம் நடைபெறும் என நல்லசாமி கூறினார்.

Update: 2023-07-22 18:51 GMT

தமிழ்நாடு கள் இயக்க கள ஒருங்கிணைப்பாளரும், விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பின் செயலாளருமான நல்லசாமி புதுக்கோட்டையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- காவிரி-வைகை-குண்டாறு இணைப்பு திட்டத்தை விரைவுபடுத்த வேண்டும். தேவையற்ற இலவசங்களை தவிர்த்து இந்த திட்டத்திற்கு முன்னுரிமை அளிக்கலாம். தமிழகத்தில் கள்ளுக்கான தடையை நீக்கக்கோரி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். 18 ஆண்டுகளாக போராடி வருகிறோம். அடுத்த ஆண்டு (2024) ஜனவரி மாதம் 21-ந் தேதி முதல் கள் இறக்கி சந்தைப்படுத்தப்படும். இது எங்களது 15-வது போராட்டம். இந்த போராட்டம் வெற்றி பெறும் என்ற நம்பிக்கை உள்ளது. முக்கியமான அரசியல் கட்சிகள் ஆதரவு தெரிவிக்கின்றனர். தமிழக அரசு கள்ளுக்கான தடையை நீக்கி அறிவிக்க வேண்டும். அவ்வாறு அறிவிக்காவிட்டால் நாடாளுமன்ற தேர்தலில் அந்த அணி தோல்வியை சந்திக்க நேரிடும். கள் போதைப்பொருள் அல்ல என்பதை நிரூபிக்க யாரும் வரவில்லை. முன் வந்தால் ரூ.10 கோடி பரிசு என அறிவித்தும் யாரும் வரவில்லை. பருவ நிலை மாற்றத்தால் வருகிற ஆண்டில் பெரும் வெள்ளம், வறட்சி ஏற்படக்கூடிய வாய்ப்பு உள்ளது. ஆன்லைன் ரம்மி சூதாட்டத்தை தடை செய்ய வேண்டும். வெங்காயம், தக்காளி, மஞ்சள் விலை கடும் உயர்வுக்கு காரணம் அரசு தான். சரியான திட்டமிடல் இல்லாதது, இருப்பு வைக்காதது அந்தந்த காலத்திற்கு ஏற்ப தேவையை கருத்தில் கொண்டு செயல்படாதது தான். இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்