`நீட்' தேர்வில் முதலிடம் பிடித்து கூலித்தொழிலாளி மகன் சாதனை

`நீட்' தேர்வில் முதலிடம் பிடித்து கூலித்தொழிலாளி மகன் சாதனை படைத்துள்ளார்.

Update: 2023-06-14 18:47 GMT

விராலிமலை தெற்கு ஆசாரி தெருவை சேர்ந்தவர்கள் கிருஷ்ணமூர்த்தி-தங்கமணி. இருவரும் கூலி தொழிலாளிகள். இவரது மகன் அறிவுநிதி (வயது 17). இவர் விராலிமலை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 12-ம் வகுப்பு முடித்துள்ளார். இவர் நடந்து முடிந்த 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 525 மதிப்பெண்கள் பெற்று பள்ளி அளவில் முதலிடம் பிடித்தார். அதனை தொடர்ந்து மருத்துவ படிப்பில் சேர வேண்டும் என்று முடிவெடுத்து நீட் தேர்வுக்காக விடா முயற்சியுடன் படித்துள்ளார். இதன் பயனாக நீட் தேர்வில் 348 மதிப்பெண்கள் பெற்று மாவட்ட அளவில் முதலிடம் பிடித்தார். இதையடுத்து அவருக்கு ஆசிரியர்கள் மற்றும் அவரது உறவினர்கள் உள்பட பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இதுகுறித்து அறிவுநிதி கூறியதாவது:- எனது பெற்றோர்கள் கூலி வேலைக்கு சென்று மிகவும் கஷ்டப்பட்டு என்னை படிக்க வைத்தனர். சிறுவயது முதலே மருத்துவராக வேண்டும் என்ற ஆசை எனக்கு இருந்து வந்த நிலையில், 11-ம் வகுப்பு படிக்கும் போதே நீட் தேர்வுக்காக படிக்க ஆரம்பித்து விட்டேன். பள்ளி நேரங்களில் ஆசிரியர்கள் உதவியுடன் நீட் தேர்வுக்கு படித்தேன். இருப்பினும் இன்னும் அதிகமான பயிற்சி தேவைப்படுகிறது என உணர்ந்த நான் சமூக வலைத்தளத்தில் தேடும்போது உயிரியல் பாடத்திற்கு இலவசமாக பயிற்சி அளிக்கப்பட்டது. அதனை நான் நன்றாக பயன்படுத்திக் கொண்டேன். சமூக வலைத்தளத்தை முறையாக பயன்படுத்தினால் இது போன்ற வெற்றிகளும் கிடைக்கும் என்பதை தற்போது உணர்கிறேன். இனிவரும் காலங்களில் நீட் தேர்வுக்கு என அரசாங்கமே இதுபோன்ற செயலியை உருவாக்கி மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கும் பட்சத்தில் இன்னும் நிறைய மாணவர்கள் தேர்ச்சி அடைய வாய்ப்பு உள்ளது. அ.தி.மு.க. ஆட்சியில் கொண்டுவரப்பட்ட 7.5 சதவீத இட ஒதுக்கீடு எனக்கு தற்போது மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்