தீக்குளிக்க முயன்ற கடைக்காரரால் பரபரப்பு
தீக்குளிக்க முயன்ற கடைக்காரரால் பரபரப்பு ஏற்பட்டது.
முசிறி:
முசிறியில் நகரப் பஸ் நிலையம் சுமார் 50 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கி வருகிறது. இந்த நகர பஸ் நிலைய வளாகத்தில் வணிக நிறுவன கடைகளும் செயல்படுகிறது. இந்நிலையில் நகரப் பஸ் நிலையத்தின் கடைகளை இடித்து அகற்றிவிட்டு அங்கு வார சந்தை கட்டுவதற்காக நகராட்சி நிர்வாகம் முடிவு செய்தது. இதற்காக கடை வைத்திருப்பவர்களுக்கு கடையை காலி செய்யுமாறு நோட்டீஸ் அனுப்பப்பட்டிருந்த நிலையில், நேற்று நகராட்சி கமிஷனர், போலீசாருடன் வந்து கடைகளை இழுத்து பூட்டி சீல் வைக்கும் பணியில் ஈடுபட்டனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த கடை உரிமையாளர்கள் கடைகளை காலி செய்ய மறுத்தனர். அப்போது அங்கு கடை வைத்திருந்த ராஜா என்பவர் மண்எண்ணெயை ஊற்றி தீக்குளிக்க முயற்சித்தார். போலீசார் அவர் மீது தண்ணீரை ஊற்றி அவரை தடுத்தனர். அப்பகுதி பொதுமக்கள் பஸ் நிலைய வளாகத்தின் உள்ளே பஸ்கள் வந்து செல்லும் என்பதையும், பஸ்கள் இங்கு நிற்கும் என்பதையும் நகராட்சி நிர்வாகம் உறுதிப்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றனர். இதற்கு நகராட்சி தரப்பில் எந்த விதமான பதிலும் இல்லை. இதனால் நகராட்சி நிர்வாகத்திற்கும், பொதுமக்களுக்கும் இடையே கடும் வாக்குவாதமும், பரபரப்பும் ஏற்பட்டது. நகர பஸ் நிலையத்தில் உள்ள கடைகளை இடித்து அப்புறப்படுத்துவதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் நகராட்சி நிர்வாகம் பிடிவாதமாக செயலில் ஈடுபடுவது அப்பகுதி மக்களிடையே மிகுந்த அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. இதனைத் தொடர்ந்து மதியம் முசிறி கோட்டாட்சியர் மாதவன் வார சந்தை இடத்தையும் மற்றும் பழைய பஸ் நிலையத்தையும் அளவீடு செய்து ஆய்வு செய்தார். இதனை தொடர்ந்து கோட்டாட்சியர் அலுவலகத்தில் அனைத்து தரப்பு மக்களை வரவழைத்து அமைதி பேச்சுவார்த்தை நடைபெற்றது. கடைக்காரர்களுக்கு நாளைக்குள் (அதாவது இன்று) தங்களது பொருட்களை எடுத்துக்கொள்வதற்கு அனுமதிக்கப்பட்டது.