வாகனங்கள் எளிதில் செல்ல சர்வீஸ் சாலை அகலப்படுத்தப்படும்

சென்னையில் இருந்து காட்பாடிக்கு வாகனங்கள் எளிதில் செல்ல சர்வீஸ் சாலை அகலப்படுத்தப்படும் என வேலூர் புதிய பஸ் நிலையத்தில் ஆய்வு செய்த கலெக்டர் குமாரவேல்பாண்டியன் தெரிவித்தார்.

Update: 2022-09-14 12:19 GMT

சென்னையில் இருந்து காட்பாடிக்கு வாகனங்கள் எளிதில் செல்ல சர்வீஸ் சாலை அகலப்படுத்தப்படும் என வேலூர் புதிய பஸ் நிலையத்தில் ஆய்வு செய்த கலெக்டர் குமாரவேல்பாண்டியன் தெரிவித்தார்.

கலெக்டர் ஆய்வு

வேலூர் புதிய பஸ் நிலையத்தில் இருந்து பஸ்கள் வழக்கம்போல் இயக்கப்பட்டு வருகிறது. போக்குவரத்து நெரிசலை தவிர்க்க கிரீன் சர்க்கிள் பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் கலெக்டர் குமாரவேல்பாண்டியன் புதிய பஸ் நிலையம் பகுதிகளில் ஆய்வு செய்தார். அப்போது மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ்கண்ணன், மாநகராட்சி மேயர் சுஜாதா, கமிஷனர் அசோக்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.

பின்னர் கலெக்டர் குமாரவேல்பாண்டியன் கூறியதாவது:-

வேலூர் புதிய பஸ் நிலையம் முழுமையாக பயன்பாட்டுக்கு வந்துள்ளது. கிரீன் சர்க்கிள் பகுதியில் இருந்து புதிய பஸ் நிலையம் வரும் சாலையின் (சைக்கிள் ஷெட்) ஓரம் கழிவுநீர் தேங்குகிறது. அதை வெளியேற்ற கால்வாய் அமைக்கப்பட்டு பாதாள சாக்கடையுடன் இணைக்கப்படும். இங்கு உள்ள கடைகளை ஏலம் விடுவது குறித்தும், தற்காலிகமாக கடைகள் அமைப்பது குறித்தும் மாநகராட்சி நிர்வாகத்தினர் முடிவு செய்வார்கள்.

பஸ் நிலையம் சுத்தமாக உள்ளது. மேலும் சில பகுதிகளை சுத்தமாக வைத்திருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. புதிய பஸ் நிலையம் அருகே காட்பாடி செல்லும் பாதையில் நடுவில் உள்ள தடுப்புச்சுவர் முழுவதுமாக அகற்றப்படும்.

ஏ.டி.எம். மையம்

காட்பாடி குடியாத்தம் பகுதியில் இருந்து வரும் பஸ்கள் செல்லியம்மன் கோவில் நுழைவாயில் வழியாக உள்ளே வருவதற்கு அனுமதிப்பது குறித்து ஆலோசனை செய்யப்பட்டு வருகிறது. சென்னையில் இருந்து காட்பாடி செல்லும் வாகனங்கள் தேசிய நெடுஞ்சாலையில் இறங்கி சர்வீஸ் சாலையில் செல்கிறது. அங்குள்ள சர்வீஸ் சாலையை அகலப்படுத்தப்பட உள்ளது. இதுகுறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும். பஸ் நிலையத்தில் ஏ.டி.எம். மையமும் அமைக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்