தென் மாவட்டங்களில்,மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும்- ஓ.பன்னீர் செல்வம்

தென் மாவட்டங்களில்,மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.;

Update:2024-12-14 19:13 IST

சென்னை,

தமிழ்நாடு முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

இலங்கை கடற் பகுதியில் நிலவிய காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் காரணமாக, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டு, மக்கள் மிகுந்த துயரத்திற்கு ஆளாகியிருக்கிறார்கள். இது மட்டுமல்லாமல், இன்னும் மழைப் பொழிவு இருக்கும் என்ற எச்சரிக்கையும் விடப்பட்டுள்ளது. சென்ற ஆண்டை போலவே இந்த ஆண்டும் தென் மாவட்ட மக்கள் கடும் பாதிப்பிற்கு ஆளாகியுள்ளனர்.

திருநெல்வேலி மாவட்டம் ஊத்து என்ற இடத்தில் 54 செ.மீ. மழையும், அம்பாசமுத்திரத்தில் 37 செ.மீ, மழையும், கனடியன் மற்றும் காக்காச்சியில் தலா 35 செ.மீ. மழையும், மாஞ்சோலையில் 32 செ.மீ. மழையும், நாலுமுக்கில் 31 செ.மீ. மழையும் பெய்திருக்கிறது. இதன் காரணமாக திருநெல்வேலி சந்திப்பு, ரயில் நிலையம் ஆகிய பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. திருநெல்வேலி, தாமிரபரணி ஆற்றில் வினாடிக்கு ஒரு இலட்சம் கன அடி நீர் சென்று கொண்டிருக்கிறது. இதேபோன்று, தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியிலும் 37 செ.மீ. மழை பெய்துள்ளது. இது தவிர, ஏால், ஸ்ரீவைகுண்டம், திருச்செந்தூர், சிவகாசி, அருப்புக்கோட்டை, சாத்தூர், ராஜபாளையம், ஸ்ரீவில்லிப்புத்தூர் உள்ளிட்ட பகுதிகளிலும் கனமழை பெய்துள்ளதன் காரணமாக, பல பாலங்களில் தண்ணீர் செல்வதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. தென்காசி மற்றும் விருதுநகர் மாவட்டங்களிலும் பலத்த மழை பெய்துள்ளது. தென் மாவட்டங்களில் பல இடங்களில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததன் காரணமாக மக்களின் உடைமைகளுக்கு பெருத்த சேதம் ஏற்பட்டுள்ளது.

இதற்குக் காரணம் கால்வாய்களை தூர்வாரததும், ஆக்கிரமிப்புகளும்தான் காரணம்என்று அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். திருச்சுழி, காளையார்குளம் கண்மாயில் உடைப்பு ஏற்பட்டதன் காரணமாக நெற்பயிர் மற்றும் இதர பயிர்கள் மழை நீரில் மூழ்கியுள்ளன. திருச்சி, திருப்பூர், இராமநாதபுரம், பொள்ளாச்சி போன்ற பகுதிகளும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. ஆனால், மீட்பு பணி மற்றும் நிவாரணப் பணிகள் மந்த கதியில் நடப்பதாக தகவல்கள் வருகின்றன.

தென் மாவட்டங்களில் மீண்டும் கனமழைப் பொழிவிற்கான வாய்ப்பு இருக்கும் என்று இந்திய வானிலை மையம் அறிவித்துள்ள நிலையில், எங்கெங்கெல்லாம் மேலும் பாதிப்பு ஏற்படக்கூடும் என்பதைக் கண்டறிந்து அங்குள்ள மக்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கவும்; குடிசைகள், வீடுகள், வீடுகளில் உள்ள உடமைகள், வாகனங்கள் என எதுவாக இருந்தாலும் சேதத்திற்கு ஏற்ப நிவாரணத் தொகை வழங்கவும்; பயிர்களுக்கு இரட்டிப்பு இழப்பீட்டுத் தொகை அளிக்கவும், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 25 லட்சம் ரூபாய் வழங்கவும், ஆங்காங்கே குளம் போல் தேங்கியுள்ள மழைநீரை அப்புறப்படுத்தவும், போக்குவரத்தை சரி செய்யவும் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்