ஆற்றில் இழுத்துச்செல்லப்பட்ட விவசாயியை தேடும் பணி தீவிரம்
ஆற்றில் இழுத்துச்செல்லப்பட்ட விவசாயியை தேடும் பணி தீவிரமாக நடந்தது.
கீழப்பழுவூர்:
அரியலூர் மாவட்டம், கீழப்பழுவூர் அருகே சுள்ளங்குடி ஊராட்சிக்கு உட்பட்ட பெரியமறை கிராமத்தை சேர்ந்தவர் முருகானந்தம்(வயது 54). விவசாயியான இவர் நேற்று மாலை கொள்ளிடம் ஆற்றில் திட்டுப்பகுதியில் மேய்ந்து கொண்டிருந்த தனது கால்நடைகளை ஓட்டுவதற்காக கொள்ளிடம் ஆற்றின் தண்ணீரில் இறங்கி சென்றார். ஆற்றில் நேற்று மாலை அதிக அளவில் தண்ணீர் வந்ததால், எதிர்பாராதவிதமாக அவர் தண்ணீரில் இழுத்து செல்லப்பட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த அருகில் இருந்தவர்கள், இது குறித்து அவரது உறவினர்கள் மற்றும் திருமானூர் போலீசார், திருவையாறு தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் படகில் சென்று ஆற்றில் முருகானந்தத்தை தீவிரமாக தேடி வருகின்றனர். இது குறித்து அறிந்த முருகானந்தத்தின் உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் கொள்ளிடம் ஆற்றின் கரையில் திரண்டனர். இரவு 7 மணி வரை தேடியும் முருகானந்தம் கிடைக்கவில்லை. இருட்டி விட்டதால் தேடும் பணி நிறுத்தப்பட்டது. இன்று(ஞாயிற்றுக்கிழமை) மீண்டும் ேதடும் பணி நடக்கிறது.இதற்கிடையே முருகானந்தத்தை ஆற்றில் தேடிய தீயணைப்பு வீரர்களில் ஒருவர், திடீரென சுழலில் சிக்கிக்கொண்டார். இதனால் அவர் சத்தம் போடவே, அதைக்கண்டு கரையில் இருந்த பொதுமக்களும் பதறி சத்தம் போட்டனர். உடனே மற்ற தீயணைப்பு வீரர்கள் சுதாரித்து, சுழலில் சிக்கியவரை மீட்டனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.