முற்றுகை போராட்டத்தில் ஈடுபட வந்த துப்புரவு பணியாளர்கள்
கே.வி.குப்பம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட வந்த துப்புரவு பணியாளர்கள் போராட்டத்தை வாபஸ் பெற்றனர்.
கே.வி.குப்பம் ஊராட்சி ஒன்றியம் குடிநீர், மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டி பம்பு ஆபரேட்டர்கள், துப்புரவு பணியாளர்கள், தூய்மை காவலர்கள் சங்கம் சார்பில் ஊதிய உயர்வு, ஊதிய நிலுவைகள் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வட்டார வளர்ச்சி அலுவலகம் முற்றுகைப் போராட்டம் நடத்த போவதாக அறிவித்தனர்.
அதன்படி நேற்று அவர்கள் முற்றுகை போராட்டம் நடத்த அங்கு வந்தனர். இதற்கிடையில் வட்டார வளர்ச்சி அலுவலகம் சார்பில் நடைபெற்ற பேச்சுவார்த்தை காரணமாக முற்றுகை போராட்டம் நடைபெறவில்லை.
அதற்கு பதிலாக உறுப்பினர்களின் திடீர் கூட்டம் வட்டார வளர்ச்சி அலுவலக வளாகத்தில் நடைபெற்றது. மாவட்ட தலைவர் எம்.குமரவேல் தலைமை தாங்கினார். ஒன்றிய தலைவர் ராஜேந்திரன், செயலாளர் தட்சிணாமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில், வட்டார வளர்ச்சி அலுவலகத்தின் 2017-ம் ஆண்டு உத்தரவின்படி பணியாளர்களுக்கு ரூ.4,540 வழங்கப்படவில்லை. அனைத்துப் பணியாளர்களுக்கும், அரசாணை உத்தரவுப்படி இதுவரை சீருடைகள் வழங்கப்படவில்லை. ஊதியம் பெறும் பணியாளர்களுக்கு பணிப்பதிவேடு பராமரிப்பு போன்றவற்றை உடனே வழங்கவேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இக்கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால் முற்றுகை போராட்டம் நடைபெறும் என்று நிர்வாகிகள் தெரிவித்தனர்.
இதில் 75-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.