இந்த ஆண்டு உப்பு உற்பத்தி இலக்கை எட்ட முடியாது
வேதாரண்யத்தில் தொடர் மழையால் இந்த ஆண்டு உப்பு உற்பத்தி இலக்கை எட்ட முடியாது என உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
வேதாரண்யம்:
வேதாரண்யத்தில் தொடர் மழையால் இந்த ஆண்டு உப்பு உற்பத்தி இலக்கை எட்ட முடியாது என உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
உப்பு உற்பத்தி
நாகை மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த அகஸ்தியன்பள்ளி, கோடியக்காடு, கடினல்வயல் ஆகிய பகுதிகளில் 9 ஆயிரம் ஏக்கரில் உப்பு உற்பத்தி செய்யப்படுகிறது. உப்பு உற்பத்தியில் நேரடியாகவும், மறைமுகமாகவும் 10 ஆயிரம் தொழிலாளர்கள் வேலை வாய்ப்பு பெறுகின்றனர்.
ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை உப்பு உற்பத்தி செய்யப்படுவது வழக்கம். இந்த 9 மாதகாலத்தில் 6.50 லட்சம் டன் உப்பு உற்பத்தி செய்யப்படும். இங்கு உற்பத்தி செய்யப்படும் உப்பு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும், ஆந்திரா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட பல்வேறு வெளிமாநிலங்களுக்கும் லாரிகள் மூலம் அனுப்பி வைக்கப்படுகிறது.
பருவம் தவறிய மழை
இந்த ஆண்டு ஜனவரி மாதம் இருந்து 25-க்கும் மேற்பட்ட முறை பருவம் தவறி பெய்த மழையால் உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டது. கடந்த 20 நாட்களாக வெயில் சுட்டெரித்ததால் உப்பு உற்பத்தி தீவிரமாக நடைபெற்று வந்தது.இந்த நிலையில் வேதாரண்யம் பகுதியில் நேற்று முன்தினம் இரவு பலத்த மழை பெய்தது.
குறிப்பாக உப்பள பகுதியான கோடிக்காடு, அகஸ்தியன்பள்ளி, கடிநெல்வயல் பகுதிகளில் மழை கொட்டித்தீர்த்தது. இதனால் உப்பளங்களில் மழை நீர் தேங்கி உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டது. உப்பளங்களில் தேங்கி உள்ள மழைநீரை மோட்டார் வைத்து இறைக்கும் பணியிலும் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
இலக்கை எட்டமுடியாது
தொடர்ந்து பெய்து வரும் பருவம் தவறிய மழையால் மீண்டும் உப்பு உற்பத்தி தொடங்க ஒரு வாரமாகும். தொடர் மழையால் இந்த ஆண்டு உப்பு உற்பத்தி இலக்கை எட்ட முடியாது. இதனால் உப்பு விலை ஏறுவதற்கு வாய்ப்பு உள்ளது என உற்பத்தியாளர்கள் தெரிவித்தனர்.