பழனி முருகன் கோவிலில் 2 மாதங்கள் நிறுத்தப்பட்ட ரோப் கார் சேவை இன்று முதல் மீண்டும் தொடங்கியது
பழனி முருகன் கோவிலில் பராமரிப்பு பணிகளுக்காக 2 மாதங்கள் நிறுத்தப்பட்ட ரோப் கார் சேவை இன்று முதல் மீண்டும் தொடங்கியது.
பழனி,
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடான பழனி முருகன் கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வருகை தருகின்றனர். அவர்கள் தரிசனத்திற்காக அடிவாரத்தில் இருந்து செல்ல படிப்பாதை பிரதான வழியாக உள்ளது.
மேலும் பக்தர்கள் மலைக்கோவிலுக்கு சென்று வர ரோப் கார், மின்இழுவை ரெயில் ஆகிய சேவைகளும் உள்ளன. இதில் விரைவாகவும், இயற்கை அழகை ரசித்தபடியும் செல்லலாம் என்பதால் பெரும்பாலானோரின் முதல் தேர்வாக ரோப் கார் உள்ளது. இந்த ரோப் கார் நிலையத்தில் மாதாந்திர, வருடாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவது வழக்கம். அப்போது ரோப் கார் சேவை நிறுத்தப்படும்.
அதன்படி, கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் ரோப் கார் நிலையத்தில் வருடாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. இதன் காரணமாக ரோப் கார் சேவை நிறுத்தப்பட்டு இருந்தது.
தொடர்ந்து, ரோப் காரில் பெட்டிகள், இரும்பு சக்கரங்கள், கம்பி வடம் உள்ளிட்டவை மாற்றப்பட்டு கடந்த இரு தினங்களாக சோதனை ஓட்டம் நடைபெற்றது. இந்த நிலையில், பராமரிப்பு பணிகள் நிறைவடைந்ததை அடுத்து, கோவிலில் ரோப் கார் சேவை இன்று முதல் மீண்டும் தொடங்கியது.