தொழிலாளியை அடித்துக்கொன்று உடலை கடலில் வீசிய கொள்ளையர்கள்

செல்போன் பறிக்கும் முயற்சியில் தொழிலாளியை அடித்துக்கொன்று விட்டு உடலை கடலில் வீசிய 2 கொள்ளையர்களை போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-07-27 06:43 GMT

காசிமேடு, 

ஆந்திர மாநிலம் ஸ்ரீகாக்குளம் பகுதியை சேர்ந்தவர் லோகேஸ் (வயது 45). இவர், சென்னை காசிமேடு காசிமாநகர் பகுதியில் உறவினர் வீட்டில் தங்கி, மீன்பிடிக்கும் தொழில் செய்து வந்தார்.

நேற்று முன்தினம் காசிமேடு கடற்கரையில் நாகூரான் தோட்டம் பள்ளம் பகுதியில் கடலில் லோகேஸ் பிணமாக கிடந்தார். அவரது உடலில் ரத்த காயங்கள் இருந்தது. மர்ம நபர்கள் அவரை அடித்துக்கொலை செய்துவிட்டு உடலை கடலில் வீசி இருப்பது தெரிந்தது.

இதுபற்றி காசிமேடு மீன்பிடி துறைமுக போலீசார் வழக்குப்பதிவு செய்து லோகேசின் உடலை பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து இந்த சம்பவம் தொடர்பாக புதுவண்ணாரப்பேட்டை அண்ணாநகர் குடிசை பகுதியை சேர்ந்த கொள்ளையர்களான சாமுவேல் (21), சஞ்சய் (21) ஆகியோரை கைது செய்தனர். போலீசாரிடம் இருவரும் அளித்துள்ள வாக்குமூலம் வருமாறு:-

காசிமேடு கடற்கரையில் மது குடித்துகொண்டிருந்த லோகேசை மிரட்டி செல்போன் மற்றும் பணத்தை பறிக்க முயன்றோம். ஆனால் அவர் பணம்- செல்போனை கொடுக்க மறுத்து தப்பி ஓட முயன்றார். கடற்கரையில் ஓடியபோது அருகில் கிடந்த உடைந்த ஓடு மற்றும் கல்லால் லோகேசின் தலை, முகத்தில் தாக்கினோம். இதில் பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே இறந்து போனார்.

உடனே அவரிடம் இருந்த செல்போன், பணத்தை எடுத்துக்கொண்டோம். பின்னர் லோகேசின் உடலை கடலில் வீசினோம். உடல் வேறு இடத்தில் கரை ஓதுங்கிவிடும் என்பதால் போலீசாரிடம் இருந்து தப்பிவிடலாம் என்று நினைத்தோம். ஆனால் அதே பகுதியில் உடல் கரை ஒதுங்கியதால் போலீசாரின் விசாரணையில் சிக்கிக் கொண்டோம்.

இவ்வாறு அவர்கள் கூறியதாக போலீசார் தெரிவித்தனர்.

கைதான கொள்ளையர்களிடம் இருந்து லோகேசின் செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது. கொலையுண்ட லோகேஷ், காசிமா நகரில் உள்ள உறவினர் வீட்டில் தங்கி மீன் பிடிக்க செல்வார். மீன் பிடிக்க செல்லும் நாட்களில் இரவு குடித்துவிட்டு அதிகாலையில் மீன் பிடிக்க செல்லும் படகில் சென்று படுத்து கொள்வார்.

அதன்படி நேற்று முன்தினம் இரவு குடித்துவிட்டு கடற்கரையில் நடந்து சென்று கொண்டிருந்தபோதுதான் செல்போன் பறிக்கும் முயற்சியில் அடித்துக்கொலை செய்யப்பட்டது தெரிந்தது. இதுபற்றி ஆந்திர மாநில போலீசாருக்கும் தகவல் தெரிவித்து உள்ளனர். மேலும் இதுபற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்