தங்காளுக்கு கிளி பிடித்து கொடுக்கும் ஐதீக நிகழ்ச்சி
தங்காளுக்கு சங்கர் கிளி பிடித்து கொடுக்கும் ஐதீக நிகழ்ச்சி நடந்தது.;
மணப்பாறை:
மணப்பாறையை அடுத்த வீரப்பூர் கன்னிமாரம்மன் கோவில்களின் மாசி பெருந்திருவிழாவின் தொடர்ச்சியாக மணப்பாறை அருகே உள்ள தொப்பம்பட்டி ஊராட்சி வீரமலை அடிவாரத்தில் உள்ள படுகளம் கோவிலில் முக்கிய திருவிழாவான அம்மன் பூ பல்லக்கில் பவனி, அண்ணன்மார் படுகளம் சாய்தல் பின் எழுப்புதல் எனும் மெய்சிலிர்க்கும் தத்ரூப நிகழ்ச்சி நேற்று நள்ளிரவு தொடங்கி இன்று(திங்கட்கிழமை) அதிகாலை வரை நடைபெற்றது. முக்கிய திருவிழாவான வேடபரி என்ற பொன்னர் குதிரை தேரில் அணியாப்பூர் சென்று அம்பு போடும் நிகழ்ச்சி இன்று மாலை 6 மணிக்கு நடைபெறுகிறது. வீரப்பூர் கோவில் முன்பிருந்து பெரிய தேரில் அம்மன் பவனி நாளை(செவ்வாய்க்கிழமை) காலை 11 மணிக்கு நடைபெறுகிறது.
இந்நிலையில் திருவிழாவையொட்டி நேற்று, அண்ணன்மார் கோட்டை கட்டி ஆட்சிபுரிந்த வளநாட்டில் பொன்னர்-சங்கரின் தங்கையான தங்காள் விளையாட கிளி வேண்டும் என்று அண்ணன்களிடம் கேட்டதால், தங்கையின் விருப்பத்தை நிறைவேற்றும் வகையில் பொன்னர்-சங்கர் கோவில் அருகே குளத்தில் உள்ள மரத்தின் மீதேறி தங்காளுக்கு கிளி பிடித்துக்கொடுக்கும் வரலாற்றை நினைவுபடுத்தும் ஐதீக நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சங்கர் வேடமிட்டவர் மரத்தின் மீதேறி தங்காளாக வரும் சிறுமிக்கு கிளியை பிடித்துக் கொடுத்தார். விழாவில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.