குளிர்சாதனப்பெட்டிகள் எரிந்ததால் கரும்புகை வெளியேறியது

குளிர்சாதனப்பெட்டிகள் எரிந்ததால் கரும்புகை வெளியேறியது

Update: 2022-09-22 20:45 GMT

தஞ்சையில் ஐஸ்கிரீம் கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் குளிர்சாதனப்பெட்டிகள் எரிந்ததால் கரும்புகை வெளியேறியது.

ஐஸ்கிரீம் கிடங்கு

தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு எதிரே பயணிகள் தங்கும் விடுதி கட்டிடத்தின் கீழ் பகுதியில் தனியார் நிறுவனத்தின் ஐஸ்கிரீம், பால் விற்பனை நிலையம் உள்ளது. இதன் பின்புறம் பிரபல ஐஸ்கிரீம் நிறுவனத்தின் கிடங்கு உள்ளது.

தஞ்சை செல்வம் நகரை சேர்ந்த சேகர் என்பவர் நடத்தி வருகிறார். இந்த கிடங்கில் ஐஸ்கிரீம்கள் இருப்பு வைக்கப்பட்டு, தஞ்சை, நாகை, திருவாரூர், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன.

தீ விபத்து

மேலும் இந்த கிடங்கில் புதிய குளிர்சாதன பெட்டிகளும், பழுதான குளிர்சாதனப் பெட்டிகளும் இருந்தன. நேற்றுமாலை திடீரென இந்த கிடங்கில் தீ விபத்து ஏற்பட்டது. தீ மளமளவென பரவியதால் குளிர்சாதனப் பெட்டிகள் பற்றி எரிந்தன. அடுத்தடுத்த பெட்டிகளில் தீப்பற்றியதால் கரும்புகை வெளியேறியது. கட்டிடத்திற்கு வெளியே வந்த கரும்புகையால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. உடனே கட்டிடங்களில் இருந்தவர்கள் எல்லோரும் வெளியே ஓடி வந்தனர். பின்னர் இது குறித்து தஞ்சை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே மாவட்ட தீயணைப்புத்துறை அலுவலர் மனோபிரசன்னா, துணை அலுவலர் கணேசன் ஆகியோர் மேற்பார்வையில் நிலைய அலுவலர் பொய்யாமொழி தலைமையில் 2 வாகனங்களில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

போலீசார் விசாரணை

கரும்புகையாக காட்சி அளித்ததால் முதலில் புகையை வெளியேற்றுவதற்கான முயற்சியை தீயணைப்பு வீரர்கள் மேற்கொண்டனர். பின்னர் தீ மேலும் பரவாமல் தடுக்க தண்ணீரை பீய்ச்சி அடித்து அணைத்தனர். 1 மணிநேரத்திற்கு பிறகு தீ முழுமையாக அணைக்கப்பட்டது.

இந்த தீ விபத்தில் ஐஸ்கிரீம்கள் வைத்திருந்த 10-க்கும் மேற்பட்ட குளிர்சாதனப் பெட்டிகள் முழுவதும் எரிந்து இருக்கலாம் என தெரிகிறது. தீ விபத்து எப்படி ஏற்பட்டது? என தஞ்சை மருத்துவக்கல்லூரி போலீசார் விசாரணை நடத்தியதில் மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது தெரியவந்துள்ளது. இந்த தீ விபத்தில் எவ்வளவு சேதம் ஏற்பட்டது என உடனடியாக தெரியவில்லை. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்