போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்

போலீஸ் நிலையத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.

Update: 2023-06-01 20:53 GMT

வாக்குவாதம்

திருச்சி வடக்கு தாராநல்லூர் பகுதியில் உள்ள செல்வ முத்து மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் வருடா வருடம் கோவில் திருவிழா நடைபெற்று வருகிறது. இந்த வருடம் கோவில் திருவிழா நடத்தக்கூடாது என்று ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனை கண்டித்து அந்த ஊர் பொதுமக்கள் 100-க்கும் மேற்பட்டோர் நேற்று இரவு திருச்சி காந்தி மார்க்கெட் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர். தொடர்ந்து போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து வடக்கு போலீஸ் துணை கமிஷனர் அன்பு, அவர்களிடம் பேச்சுவார்தை நடத்தினார். அதில் இந்த வருடம் கோவில் திருவிழா நடைபெறும் என்று உறுதி அளித்ததன் பேரில் அங்கிருந்து ஊர் பொதுமக்கள் கலைந்து சென்றனர். இந்த சம்பவம் காந்தி மார்க்கெட் போலீஸ் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

புகையிலை பொருட்கள் பறிமுதல்

*திருச்சி தென்னூர் இ.பி.ரோடு அண்ணாதெரு ஜீவா நகர் பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்திருப்பதாக உணவு பாதுகாப்பு துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து கோட்டை போலீசார் மற்றும் உணவு பாதுகாப்பு மாவட்ட நியமன அலுவலர் ரமேஷ்பாபு தலைமையிலான அலுவலர்கள் அந்த பகுதியில் சோதனை நடத்தினர். இதில் பாண்டியன் என்பவரது மளிகை கடை மற்றும் அவரது வீட்டில் சோதனை நடத்தியபோது 40 கிலோ தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அந்த புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து அந்த மளிகை கடைக்கு 'சீல்' வைக்கப்பட்டது. பின்னர் கோட்டை போலீசாரிடம் புகையிலை பொருட்கள் ஒப்படைக்கப்பட்டது. இதேபோல் தேவதானம் காவேரி ரோடு பகுதியில் புகையிலை பொருட்கள் விற்றதாக 3 கடைகளுக்கு 'சீல்' வைக்கப்பட்டது.

*திருவெறும்பூர் அருகே உள்ள நவல்பட்டு சிலோன் காலனியை சேர்ந்தவர் குமார். இவரது மனைவி இளஞ்சியம். இவர் நேற்று மதியம் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து நவல்பட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

மயங்கி விழுந்த 2 பேர் சாவு

*திருச்சி மேலகல்கண்டார் தமிழர் தெருவை சேர்ந்தவர் அன்வர்பாட்சா (வயது 25). ஆட்டோ டிரைவர். இவருடைய மனைவி கரோலின்சந்தியா (23). கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்ட இந்த தம்பதிக்கு 1½ வயதில் பெண்குழந்தை உள்ளது. சம்பவத்தன்று அன்வர்பாட்சாவின் உறவினர் வீட்டு நிகழ்ச்சியில் கலந்து கொள்வது தொடர்பாக கணவன்-மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இந்தநிலையில் அன்வர்பாட்சா அந்த நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டு வீட்டுக்கு வந்தார். அப்போது, கரோலின்சந்தியாவும், குழந்தையும் வீட்டில் இல்லை. குழந்தையுடன் அவர் எங்கு சென்றார்? என்ன ஆனார்? என்று தெரியவில்லை. இதுகுறித்த புகாரின் பேரில் பொன்மலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

*திருச்சி உறையூர் ராமலிங்காநகர் 2-வதுகுறுக்குத்தெருவில் கடந்த மாதம் 23-ந்தேதி பகல் 12 மணி அளவில் 50 வயதுடைய ஆண் ஒருவர் வெயில் கொடுமை தாங்காமல் மயங்கிவிழுந்தார். இதுபோல் கடந்த மாதம் 26-ந்தேதி மதியம் வெயில் கொடுமை தாங்காமல் திருச்சி சிங்காரத்தோப்பு பகுதியில் 65 வயது முதியவர் மயங்கி விழுந்தார். அந்த வழியாக வந்தவர்கள் 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். அங்கு இருவரும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தனர். அவர்கள் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்கள்? என்பது குறித்து உறையூர் மற்றும் கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தற்கொலை

*திருச்சி உறையூர் தெலுங்கு செட்டி வீதியை சேர்ந்தவர் பூபாலன் (38). இவருடைய மனைவி அமுதா (36). பெயிண்டரான பூபாலன், மதுப்பழக்கத்துக்கு அடிமையானவர் என்று கூறப்படுகிறது. இந்தநிலையில் நேற்று முன்தினம் மதியம் வீட்டில் இருந்த பூபாலன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்த புகாரின் பேரில் உறையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

*திருச்சி தில்லைநகர் பகுதியில் மோட்டார் சைக்கிளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை கடத்திச்செல்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் தில்லைநகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரத்தினவள்ளி தலைமையிலான தில்லைநகர் பகுதியில் சோதனை நடத்தினார்கள். அப்போது, ஒரு மோட்டார் சைக்கிளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் 27 கிலோவை கடத்தி சென்றது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து மோட்டார் சைக்கிளையும், புகையிலை பொருட்களையும் பறிமுதல் செய்த போலீசார், அதை கடத்தி வந்த சரவணக்குமார்(38) என்பவரை கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்