போலீஸ்காரர்களை தள்ளிவிட்டு கைதி மீண்டும் தப்பி ஓட முயற்சி

மணப்பாறை அருகே போலீஸ்காரர்களை தள்ளி விட்டு கைதி மீண்டும் தப்பி ஓட முயற்சித்த போது, பாலத்தில் இருந்து கீழே குதித்ததால் கால் முறிந்தது.

Update: 2023-06-13 18:52 GMT

மணப்பாறை அருகே போலீஸ்காரர்களை தள்ளி விட்டு கைதி மீண்டும் தப்பி ஓட முயற்சித்த போது, பாலத்தில் இருந்து கீழே குதித்ததால் கால் முறிந்தது.

மோட்டார் சைக்கிள் திருட முயற்சி

புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடியை சேர்ந்தவர் மாதவன் (வயது 26), திருப்பூர் மாவட்டம், தாராபுரத்தை சேர்ந்தவர் ஆகாஷ் (22). இவர்கள் இருவரும் கடந்த 9-ந்தேதி திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே பொத்தமேட்டுப்பட்டியில் மோட்டார் சைக்கிளை திருட முயன்ற போது, பொதுமக்களிடம் பிடிபட்டனர். இதில் பொதுமக்கள் தாக்கியதில் இருவரும் பலத்த காயம் அடைந்தனர். பின்னர் மணப்பாறை போலீசார் அவர்களை மீட்டு கைது செய்தனர். பொதுமக்கள் தாக்கியதில் காயம் அடைந்த இருவரையும் மணப்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதில் ஆகாஷ் கடந்த 10-ந்் தேதி மருத்துவமனையின் கழிவறை வழியாக போலீஸ் பாதுகாப்பை மீறி தப்பினார்.

மீண்டும் கைது

இதனையடுத்து ஆகாஷ் குமரபட்டி கிராமத்திற்கு சென்று அங்கு நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த மோட்டார் சைக்கிளை திருடிக்கொண்டு சென்றார். தப்பி ஓடிய ஆகாஷை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். இந்த நிலையில் நேற்று காலை திருச்சி - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் ஆலத்தூர் அருகே போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தபோது, ஆகாஷை பிடித்து மீண்டும் கைது செய்தனர். பின்னர் அவர் கொடுத்த தகவலின் பேரில் தாராபுரத்தில் வைத்து இருந்த மோட்டார் சைக்கிளை மீட்டனர். அதன்பின் ஆகாஷ் மணப்பாறை - குளித்தலை சாலையில் கலிங்கப்பட்டி அருகே ஒரு மோட்டார் சைக்கிளை வைத்திருப்பதாக கூறியதை அடுத்து போலீசார் அவரை ஜீப்பில் அங்கு அழைத்து சென்றனர். அங்கு கலிங்கப்பட்டி பாலத்தின் அருகில் ஜீப்பை நிறுத்தியபோது, போலீஸ் ஏட்டு ராமு மற்றும் போலீஸ்காரர் தாசையா ஆகியோரை தள்ளிவிட்டு பாலத்தில் இருந்து கீழே குதித்து ஆகாஷ் தப்பி ஓட முயன்றார்.

காலில் எலும்பு முறிவு

இதில் பாலத்தில் இருந்து குதித்ததில் ஆகாஷின் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து போலீசார் அவரை பிடித்தனர். காலில் முறிவு ஏற்பட்டதால் அவரை மணப்பாறை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஆகாஷிற்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த சம்பவம் பற்றி அறிந்த மணப்பாறை துணை போலீஸ் சூப்பிரண்டு ராமநாதன், இன்ஸ்பெக்டர் கோபி ஆகியோர் மருத்துவமனைக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினர். மேலும் போலீஸ் பிடியில் இருந்து தப்பித்தபோது, ஆகாஷிற்கு அடைக்கலம் கொடுத்ததாக கரூர் மாவட்டம், குளித்தலையை சேர்ந்த கொலை வழக்கில் தொடர்புடைய வினோத் (29) என்பவரையும் போலீசார் கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்