முதல்-அமைச்சர் பொய் பிரசாரம் செய்கிறார்:தி.மு.க.விடம் இருந்துதான் தமிழகத்தை காப்பாற்ற வேண்டும்- ஆர்.பி.உதயகுமார் பேட்டி

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பொய் பிரசாரம் செய்கிறார். தி.மு.க.விடம் இருந்து தான் தமிழகத்தை காப்பாற்ற வேண்டும் என்று ஆர்.பி.உதயகுமார் கூறினார்.

Update: 2023-08-28 20:54 GMT


முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பொய் பிரசாரம் செய்கிறார். தி.மு.க.விடம் இருந்து தான் தமிழகத்தை காப்பாற்ற வேண்டும் என்று ஆர்.பி.உதயகுமார் கூறினார்.

பேட்டி

ஜெயலலிதா பேரவை சார்பாக மதுரையில் எடப்பாடி பழனிசாமிக்கு புரட்சி தமிழர் பட்டம் வழங்கியதை முன்னிட்டு கோவில் அர்ச்சகர்களுக்கு நலத்திட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சி காந்தி மியூசியத்தில் நடந்தது. தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி துணை தலைவர் ஆர்.பி.உதயகுமார் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

மதுரையில் நடந்த அ.தி.மு.க. மாநாட்டில் 15 லட்சம் பேர் பங்கேற்று வரலாறு சாதனை படைத்தனர். இதில் தி.மு.க. நிர்வாக சீர்கேடு, குளறுபடிகளை தோலுரித்துக் காட்டி, இந்த நிலை மாற வேண்டும் என்றால் ஜெயலலிதாவின் ஆட்சி மலர வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி பேசினார். முதல்-அமைச்சர் திருவாரூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழகத்தை காப்பாற்றி விட்டோம். இனி இந்தியாவை காப்பாற்ற வேண்டும் என பொய்பிரசாரம் பேசுவதை கண்டு சிரிப்பதா, அழுவதா என்றே தெரியவில்லை.

மு.க.ஸ்டாலின் முதல்-அமைச்சராக பதவி ஏற்ற பின்பு ரூ.30 ஆயிரம் கோடி கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. அதனை நாங்கள் கூறவில்லை. நிதி அமைச்சராக இருந்த பழனிவேல் தியாகராஜன் கூறினார். தி.மு.க ஆட்சிக்கு வந்த பிறகு தான் இந்தியாவிலேயே கடன் சுமை அதிகம் உள்ள மாநிலமாக தமிழகம் உருவானது. ஏறத்தாழ ரூ.7.53 லட்சம் கோடி கடனில் தமிழகம் தத்தளித்து வருகிறது. மராட்டியம் 2-வது இடம், உத்தரபிரதேசம் 3-வது இடம் பிடித்துள்ளது. மேலும் மின் கட்டணம் உயர்வு, பால் விலை உயர்வு, சொத்து வரி உயர்வு, சட்ட ஒழுங்கு சீர்கேடு, பாலியல் கொடுமை அதிகரிப்பு என தமிழகம் அதல பாதாளத்திற்கு சென்று விட்டது. ஆனால் தமிழகத்தை காப்பாற்றி விட்டோம் என்ற பொய் பிரசாரம் செய்வதை மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

கூரை ஏறி...

தேர்தலின் போது 520 தேர்தல் வாக்குறுதி கொடுத்தார்கள். அதில் எதை நிறைவேற்றி இருக்கிறார்கள். வெறும் விளம்பர ஆட்சி தான் நடக்கிறது. மக்களின் கடும் கோபம், கண்ணீர், வேதனைகள் போன்றவை விரைவில் வெளிப்படும். குறுக்கு வழியில் மன்னராட்சி தற்போது தமிழகத்தில் தலை தூக்கி இருக்கிறது. இதை விரட்டப்பட வேண்டும் என மக்கள் எண்ணுகிறார்கள்.தமிழகத்தை காப்பாற்றி விட்டோம் என்ற பொய் பிரசாரத்திற்கு எந்த ஆதாரமும் இல்லை, தமிழகத்தை காப்பாற்ற முடியாதவர் இந்தியாவை காப்பாற்ற போவதாக சொல்லுவது கூரை ஏறி கோழி பிடிக்க முடியாதவன், வானம் ஏறி வைகுண்டத்துக்கு வழிகாட்டுவது போல உள்ளது. உண்மையில் தி.மு.க. மற்றும் ஸ்டாலினிடம் இருந்து தமிழகத்தை காப்பாற்ற வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்