திருவள்ளூரில் நகராட்சி பள்ளிக்கூடத்தை இடமாற்றம் செய்ய எதிர்ப்பு தெரிவித்து மாணவர்களின் பெற்றோர்கள் சாலை மறியல் போராட்டம்

திருவள்ளூரில் நகராட்சி பள்ளிக்கூடத்தை இடமாற்றம் செய்ய எதிர்ப்பு தெரிவித்து மாணவர்களின் பெற்றோர்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.

Update: 2023-06-19 11:15 GMT

99 ஆண்டு கால குத்தகை

திருவள்ளூர் நகராட்சிக்குட்பட்ட வடக்கு ராஜ வீதியில் நகராட்சி நடுநிலைப் பள்ளி உள்ளது. தஞ்சாவூர் இராம நாயக்கன் அறக்கட்டளைக்கு சொந்தமான இடத்தில் இயங்கி வரும் இந்த பள்ளி 99 ஆண்டுகால குத்தகை மூலம் கடந்த 1927-ம் ஆண்டு முதல் நடைபெற்று வந்தது. தற்போது திருவள்ளூர் நகராட்சி நடுநிலைப் பள்ளியாக செயல்பட்டு வரும் இப்பள்ளி கட்டிடத்தில் எல்.கே.ஜி முதல் 8-ம் வகுப்பு வரை மற்றும் அங்கன்வாடி மையமும் செயல்பட்டு வருகிறது. மொத்தம் 180 மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். இந்நிலையில் 99 ஆண்டு கால குத்தகை காலம் முடியும் தருவாயில் இருப்பதால் அந்த கட்டிடம் இராம நாயக்கன் டிரஸ்ட்டுக்கு தேவைப்படுவதால் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததாக கூறப்படுகிறது.

கட்டிடம் பழுது

இந்த கட்டிடம் மிகவும் பாழடைந்து காணப்படுவதால் அங்கு பயிலும் 180 மாணவர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளதாகவும் கோர்ட்டில் தெரிவிக்கப்பட்டது. நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் ஆய்வு செய்த அண்ணா பல்கலைக்கழக தொழில்நுட்ப கட்டிடப் பிரிவு குழுவினர், இந்த கட்டிடம் பள்ளிக் கூடம் நடத்த தகுதியில்லை என்று அறிக்கை தாக்கல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் மாற்று இடத்தில் பள்ளிக்கூடம் நடத்த முடிவு செய்யப்பட்டது. இதனையடுத்து நடந்த திருவள்ளூர் நகராட்சி பள்ளி மேலாண்மைக் குழு ஆலோசனைக் கூட்டத்தில் பள்ளியை வேறு இடத்திற்கு மாற்ற தீர்மானிக்கப்பட்டது.

சாலை மறியல்

இருப்பினும், இதற்கு எதிர்ப்பு தெரிவித்த மாணவர்களின் பெற்றோர்கள் திருவள்ளூர்-செங்குன்றம் சாலையில் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்து வந்த திருவள்ளூர் நகராட்சி அதிகாரிகள் ஆசிரியர் மற்றும் பெற்றோர்களிடமும் பேச்சுவார்த்தை நடத்தினர். சத்தியமூர்த்தி தெருவில் உள்ள தனபால் செட்டியார் திருமண மண்டபத்தில் பள்ளிக்கூடம் நடத்தப்படும் என அதிகாரிகள் உறுதியளித்ததையடுத்து, சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்