பா.ஜனதா காலூன்ற முடியாத ஒரே மாநிலம் தமிழ்நாடு - செல்வப்பெருந்தகை

தி.மு.க. தலைமையிலான காங்கிரஸ் உள்ளிட்ட மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வலிமையுடன் உள்ளதாக செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.

Update: 2024-02-25 08:13 GMT

கோப்புப்படம் 

சென்னை,

உலக கோடீஸ்வரர்கள் மத்தியில் முதல் இடத்தை பெறுவதற்கு அதானியும், அம்பானியும் மோடி ஆட்சியின் தயவால் போட்டி போட்டுக் கொண்டிருப்பதாக தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "பத்து ஆண்டுகால பா.ஜனதா ஆட்சி, கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் மத ரீதியாக மக்களை பிளவுபடுத்தி, அரசியல் ஆதாயத்தோடு செயல்பட்டு வருகிறது. தவறான சமூகப் பொருளாதார கொள்கை காரணமாக மிகப்பெரிய பேரழிவை நோக்கி நாடு சென்று கொண்டிருக்கிறது.

வேலையில்லா திண்டாட்டம், விலைவாசி உயர்வு, விவசாயிகளின் விளை பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை நிர்ணயிக்காமல் விவசாயிகளை வஞ்சித்தது, வெறுப்பு அரசியல் மூலம் மதநல்லிணக்க சீர்குலைவு போன்ற மக்களை பாதிக்கிற பிரச்சினைகள் விஸ்வரூபம் எடுத்துள்ளன. இதை தீர்த்து வைப்பதற்கு பதிலாக 10 ஆண்டுகால ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியைப் பற்றி பொய் மூட்டைகளை அவிழ்த்து விடுகிற பணியில் பா.ஜனதா அரசு தொடர்ந்து ஈடுபட்டிருக்கிறது. இத்தகைய ஆதாரமற்ற அவதூறு பிரசாரத்தை முறியடிக்க வேண்டியது நமது தலையாய கடமையாகும்.

மோடி ஆட்சியில் ஏழை, எளிய சாமானிய மக்களின் வாழ்க்கைத்தரம் உயர்வதற்கு பதிலாக அதானி, அம்பானி உள்ளிட்ட கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை அதிகரித்து சொத்து குவிக்கப்பட்டு வருகிறது. நடைபெறும் மோடி ஆட்சி சாமானிய மக்களுக்கான ஆட்சி இல்லை என்பதற்கு இதைவிட வேறு சான்று தேவையில்லை. மோடி ஆட்சியில் பலனடைந்த கார்ப்பரேட் பெருமுதலாளிகள் கைமாறாக தேர்தல் பத்திர நன்கொடை திட்டத்தை பயன்படுத்தி வருகிறார்கள்.

பா.ஜனதா அரசு கொண்டு வந்த தேர்தல் பத்திர நன்கொடை மூலம் 2018 முதல் 2023 வரை பெறப்பட்ட மொத்த நன்கொடை ரூபாய் 12 ஆயிரத்து 8 கோடி. இதில் பா.ஜனதா பெற்ற மொத்த நன்கொடை 6,564 கோடி ரூபாய். இது மொத்த நன்கொடையில் 55 சதவிகிதம். இந்த நன்கொடை திட்டத்தின் மூலமாக ரூபாய் 1 கோடி வழங்கியவர்கள் 6,812 பேர். இந்த நன்கொடையில் பெரும் பங்கு பா.ஜனதாவுக்கு சென்றுள்ளது.

இந்தியாவில் 25 கோடி மக்களை வறுமையிலிருந்து மீட்டதாக மோடி தம்பட்டம் அடித்து கொள்கிறார். 2023ல் வெளிவந்த சர்வதேச பசி குறியீட்டு பட்டியலின்படி 125 நாடுகள் வரிசையில் இந்தியா 111-வது இடத்தில் இருக்கிறது. 2022ல் 107-வது இடத்தில் இருந்து 111-வது இடத்துக்கு உயர்ந்ததுதான் மோடியின் வறுமை ஒழிப்பு சாதனையா.. ?

இந்தியாவிலேயே பா.ஜனதா காலூன்ற முடியாத ஒரே மாநிலமாக தமிழ்நாடு இருக்கிறது. இங்கே தி.மு.க. தலைமையிலான காங்கிரஸ் உள்ளிட்ட மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்டுக்கோப்பாக வலிமையுடன் ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகிறது. இதன்மூலம் 2019ல் பெற்ற வெற்றியை விட நாற்பதும் நமதே என்ற இலக்கை நோக்கி நமது பயணம் பீடுநடை போட்டு வருகிறது" என்று அதில் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்