சமுதாய கூடத்தில் தூங்கிய மூதாட்டி கொலை

போளூர் அருகே சமுதாய கூடத்தில் தூங்கிய மூதாட்டியை, மர்ம நபர்கள் கொலை செய்து, நகை-பணத்தை கொள்ளையடித்து சென்றனர்.

Update: 2022-09-02 13:33 GMT

போளூர்

போளூர் அருகே சமுதாய கூடத்தில் தூங்கிய மூதாட்டியை, மர்ம நபர்கள் கொலை செய்து, நகை-பணத்தை கொள்ளையடித்து சென்றனர்.

மூதாட்டி கொலை

திருவண்ணாமலை மாவட்டம் போளூரை அடுத்த புலிவானந்தல் கிராமத்தை சேர்ந்தவர் சின்னத்தம்பி. இவரது மனைவி காசியம்மாள் (வயது 85). இவர்களுக்கு 3 மகன்கள். அவர்களில் 2 பேர் இறந்து விட்டனர்.

சின்னத்தம்பியும் கடந்தசில வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்டதால் 3-வது மகன் சின்னபையன் பராமரிப்பில் காசியம்மாள் இருந்து வந்தார்.

காசியம்மாளுக்கு விவசாய நிலம் உள்ளது. மகன் வீட்டில் சாப்பிட்டு விட்டு அருகில் உள்ள சமுதாய கூடத்தில் தனியாக வசித்து வந்தார்.

நேற்று இரவு வழக்கம்போல சாப்பிட்டு விட்டு சமுதாய கூடத்தில் தூங்கினார். நேற்று காலை வெகு நேரம் ஆகியும் வராததால் அங்கு மருமகள்கள் தேவகி, குமாரி ஆகியோர் சென்று பார்த்தபோது காசியம்மாள் கழுத்தில் இரண்டு இடங்களில் குத்தப்பட்டு ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார்.

நகை-பணம் கொள்ளை

மேலும் அவர் அணிந்திருந்த கம்மல், அவர் எப்போதும் வைத்திருக்கும் ரொக்க பணம் கொள்ளை அடிக்கப்பட்டிருந்தது. மர்ம நபர்கள் காசியம்மாளை கொலை செய்துவிட்டு நகை, பணத்தை கொள்ளையடித்து சென்றது தெரிய வந்தது.

இதுகுறித்து இளைய மருமகள் குமாரி, போளூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் ஜெயபிரகாஷ் வழக்குப்பதிவு செய்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார்.

போளூர் துணை போலீஸ் சூப்பிரண்டு பி.குமார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார். மோப்பநாய் மியா வரவழைக்கப்பட்டது.

அது கிராமத்தில் சுற்றி வந்தது. ஆனால் யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. கைரேகை நிபுணர்கள் தடயங்களை சேகரித்தனர்.

இச்சம்பவம் போளூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்