மூதாட்டி கழுத்தை நெரித்துக்கொலை
விழுப்புரம் அருகே மூதாட்டியை கழுத்தை நெரித்துக்கொலை செய்த அவரது கணவரை போலீசார் கைது செய்தனர்
விழுப்புரம்
மூதாட்டி
விழுப்புரம் அருகே உள்ள காவணிப்பாக்கம் விநாயகர் கோவில் தெருவை சேர்ந்தவர் கலியமூர்த்தி(வயது 80). இவருடைய மனைவி விருத்தாம்பாள்(70). இவர்களுக்கு 4 மகன்களும், 2 மகள்களும் உள்ளனர். சற்று மனநிலை பாதிக்கப்பட்ட கலியமூர்த்தி அவ்வப்போது முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக சென்று வந்துள்ளார்.
இந்நிலையில் நேற்று காலை 6.30 மணியளவில் கலியமூர்த்தியின் மகன் சங்கரின் மனைவி மாலா என்பவர், தனது மாமனார் வீட்டு வாசலில் தண்ணீர் தெளிக்க வந்தார். அப்போது வீட்டின் முன்பக்க கதவு திறந்திருந்தது. உடனே அவர் வீட்டிற்குள் சென்று விருத்தாம்பாளை அழைத்தபோதிலும் அவர் எழுந்திருக்கவில்லை. இதனால் சந்தேகமடைந்த மாலா, தனது கணவர் சங்கருக்கு தகவல் தெரிவித்தார். உடனே அவர், தனது பெற்றோர் வீட்டிற்கு வந்து பார்த்தபோது அங்கு அவரது தாய் விருத்தாம்பாள் கழுத்தில் ரத்த காயங்களுடன் இறந்திருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
கழுத்தை நெரித்துக்கொலை
இதுகுறித்த தகவலின்பேரில் விழுப்புரம் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்தன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
விசாரணையில், கலியமூர்த்தி தனது மனைவி விருத்தாம்பாளை ஆசைக்கு இணங்குமாறு வற்புறுத்தியுள்ளதும், அதற்கு அவர் வர மறுத்ததால் அருகில் கிடந்த கயிற்றால் விருத்தாம்பாளின் கழுத்தை நெரித்துள்ளதில் அவர் இறந்திருப்பதும் தெரியவந்தது.
கணவர் கைது
இதையடுத்து கலியமூர்த்தியை போலீசார் கைது செய்தனர். ஆனால் அவர் சற்று மனநிலை பாதிக்கப்பட்டிருப்பதால் சிறையில் அடைக்காமல் மருத்துவ பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்துள்ளனர். அங்கு அவருக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டு அதில் மனநிலை பாதிக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டால் சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள மனநல மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்படுவார். அங்கு அவருக்கு சிகிச்சை முடிந்து குணமடைந்ததும் சிறையில் அடைக்கப்படுவார் என்று போலீசார் தெரிவித்தனர்.