சளிக்கு சிகிச்சை பெற வந்த சிறுமிக்கு நாய்கடி ஊசி போட்ட நர்சு பணியிடை நீக்கம்

கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் சளிக்கு சிகிச்சை பெற வந்த சிறுமிக்கு நாய்க்கடி ஊசி போட்ட நர்சு பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்

Update: 2023-06-29 18:45 GMT

கடலூர்

சளியால் பாதிப்பு

கடலூர் அருகே உள்ள கோதண்டராமாபுரத்தை சேர்ந்தவர் கருணாகரன். இவரது மகள் சாதனா(வயது 13). சளியால் பாதிக்கப்பட்ட சாதனாவை கருணாகரன் சிகிச்சைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றார்.

அங்கு அவளை பரிசோதனை செய்த டாக்டர் ஊசி போடுவதற்கும், மாத்திரைக்கும் சீ்ட்டு எழுதி கொடுத்தார். அதை வாங்கிய கருணாகரன் தனது மகளை ஊசி போடும் அறைக்கு அழைத்துச்சென்றார்.

2 ஊசி போட்டார்

அப்போது பணியில் இருந்த கடலூரை சேர்ந்த நர்சு கண்ணகி(45), சாதனாவுக்கு 2 ஊசி போட்டுள்ளார். இதை பார்த்த கருணாகரன், சளி தொல்லைக்கு 2 ஊசியா? என்று கேட்டார். அப்போதுதான் நர்சு கண்ணகி தவறுதலாக நாய் கடிக்குரிய ஊசி போட்டது தெரியவந்தது. உடனடியாக சாதனா, கடலூர் அரசு ஆஸ்பத்திரியிலேயே உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். இதுகுறித்து கருணாகரன், புதுநகர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

பணியிடை நீக்கம்

இதற்கிடையே மாவட்ட மருத்துவ பணிகள் இணை இயக்குனர் (பொறுப்பு) சாரா செலின்பால், தவறுதலாக சிறுமிக்கு ஊசி போட்டது தொடர்பாக நேற்று நர்சு கண்ணகியிடம் விசாரணை நடத்தினார்.

அப்போது டாக்டர், சளிக்கு உரிய ஊசி போட சீட்டு எழுதி கொடுத்ததும், அதை சரியாக கவனிக்காமல் நாய் கடிக்கு போடக்கூடிய ஊசியை போட்டதும் தெரியவந்தது.

இதையடுத்து பணியில் கவனக்குறைவாக செயல்பட்ட கண்ணகியை பணியிடை நீக்கம் செய்து, மருத்துவ பணிகள் இணை இயக்குனர் சாரா செலின்பால் உத்தரவிட்டுள்ளார். இதற்கிடையே சிகிச்சை முடிந்து உடல்நலம் தேறிய சாதனா, வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் கடலூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்