செலவுக்கு பணம் தர மறுத்த தாய் கோடரியால் வெட்டி படுகொலை
தேவதானப்பட்டி அருகே செலவுக்கு பணம் தர மறுத்த தாயை கோடரியால் வெட்டி படுகொலை செய்த மகனை போலீசார் கைது செய்தனர்.
பணம் கேட்டு தகராறு
தேனி மாவட்டம் தேவதானப்பட்டி அருகே மஞ்சளாறு பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 56). இவரது மனைவி ஜோதி (45). இவர்களுக்கு விருமாண்டி (27), மருதுபாண்டி (24), சிவபாண்டி (22) ஆகிய 3 மகன்கள் உள்ளனர். அவர்களுக்கு திருமணமாகவில்லை.
மணிகண்டன் தனக்கு சொந்தமான ஆடுகளை மேய்த்து வருகிறார். விருமாண்டி, சிவபாண்டி ஆகியோர் கூலி வேலைக்கு சென்று வருகின்றனர். மருதுபாண்டி வேலைக்கு செல்லாமல் ஊர் சுற்றி வந்தார். நேற்று காலையில் மணிகண்டன் ஆடுகளை மேய்க்க சென்று விட்டார். 2 மகன்களும் வேலைக்கு சென்றனர். வீட்டில் ஜோதியும், மருதுபாண்டியும் இருந்தனர். அப்போது ஜோதியிடம், செலவுக்கு பணம் வேண்டும் என்று கேட்டு மருதுபாண்டி தகராறில் ஈடுபட்டார். அவர் பணம் தர மறுத்தார்.
வெட்டி கொலை
இதனால் அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த மருதுபாண்டி வீட்டில் இருந்த கோடரியை எடுத்து தாய் என்று கூட பார்க்காமல் அவர் தலையில் ஓங்கி வெட்டினார். அவருடைய அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் அங்கு ஓடி வந்தனர். அவர்களை பார்த்தவுடன் மருதுபாண்டி அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.
பின்னர் படுகாயம் அடைந்த ஜோதியை, அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து தேவதானப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். தலைமறைவாக இருந்த மருதுபாண்டியை போலீசார் கைது செய்தனர். செலவுக்கு பணம் தராததால் பெற்ற தாய் என்று கூட பார்க்காமல் வெட்டி படுகொலை செய்த சம்பவம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியது.