இடைநிலை ஆசிரியர்கள் போராட்டத்தை கைவிட அமைச்சர் அன்பில் மகேஷ் மீண்டும் வேண்டுகோள்

இடைநிலை ஆசிரியர்கள் போராட்டத்தை கைவிட அமைச்சர் அன்பில் மகேஷ் மீண்டும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Update: 2024-02-29 20:54 GMT

சென்னை,

சம வேலைக்கு சம ஊதியம் கோரி இடைநிலை ஆசிரியர்கள் கடந்த மாதம் (பிப்ரவரி) 19-ந்தேதி முதல் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். முதலில் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பேராசிரியர் அன்பழகனார் கல்வி வளாகத்தை முற்றுகையிடும் போராட்டத்தை தொடர்ந்தனர். அதனையடுத்து மாவட்ட தலைநகரங்களில் முற்றுகை போராட்டம் நடத்தப்பட்டதோடு, உண்ணாவிரத போராட்டத்தையும் கையில் எடுத்தனர்.

ஒவ்வொரு நாளும் போராட்டம் நடத்தும் ஆசிரியர்களை போலீசார் கைது செய்வது, பின்னர் மாலை விடுவிப்பதுமான நிலை நீடித்து வருகிறது. அந்த வகையில் 11-வது நாளாக நேற்றும் இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் நீடித்தது. தமிழ்நாடு முழுவதும் சுமார் 10 ஆயிரம் ஆசிரியர்கள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாக சொல்லப்படுகிறது.

பணிக்கு வராமல் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் இடைநிலை ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகின. இது போராடும் ஆசிரியர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால் அதுபோன்ற எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று தொடக்கக் கல்வித்துறை உயர் அதிகாரி திட்டவட்டமாக மறுத்துவிட்டார்.

இதற்கிடையில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியிடம் பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், 'ஆசிரியர்களின் கோரிக்கைகள் தெரியாமல் இல்லை. ஆசிரியர்களின் கோரிக்கைகளை உள்வாங்கியுள்ளோம். மூவர் குழுவிடம் அறிக்கை வாங்கி, முதல்-அமைச்சரிடம் சமர்ப்பித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும். அதுவரை ஆசிரியர்கள், மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு, போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்ப வேண்டும்' என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்