தாம்பரம் கோட்டாட்சியர் அலுவலகம் முன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி ஆர்ப்பாட்டம்
தாம்பரம் கோட்டாட்சியர் அலுவலகம் முன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.
சென்னையை அடுத்த தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நீண்டகாலமாக வசிக்கும் மக்களுக்கு வருவாய்த்துறை ஆக்கிரமிப்பாளர்கள் என நோட்டீஸ் அளிப்பதை கைவிட வேண்டும். நில வகை மாற்றம் செய்து பட்டா வழங்க வேண்டும் என வலியுறுத்தி நேற்று காலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் அக்கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் பெ.சண்முகம் தலைமையில் தாம்பரம் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் அக்கட்சியின் தென்சென்னை மாவட்ட செயலாளர் ஆர்.வேல்முருகன், தாம்பரம் மாநகராட்சி கவுன்சிலர் விஜயலட்சுமி, பகுதிச் செயலாளர்கள் தா.கிருஷ்ணா, எம்.சி.பிரபாகரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர்.
பின்னர் வருவாய் கோட்டாட்சியர் செல்வக்குமாரை சந்தித்து தங்கள் கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்தனர். மனுவை பெற்றுக்கொண்ட அவர், இதுபற்றி கலெக்டரின் கவனத்துக்கு கொண்டு செல்வதாக உறுதி அளித்தார்.