மகனை அரிவாளால் வெட்டியவர் கைது
ராமநாதபுரத்தில் மகனை அரிவாளால் வெட்டியவர் கைது செய்யப்பட்டார்.
ராமநாதபுரம் அருகே உள்ள கவரங்குளம் பகுதியை சேர்ந்தவர் மாடசாமி என்பவரின் மகன் பழனிவேல் (வயது 30). இவருடைய மனைவி ராஜலெட்சுமி. இவர்களுக்கு குழந்தை இல்லை என்று பழனிவேலின் தந்தை மாடசாமி (70) அடிக்கடி அவதூறாக பேசி வந்தாராம். இந்நிலையில் நேற்று முன்தினம் மாடசாமி மருமகள் மற்றும் மகனை அவதூறாக பேசினாராம். இதில் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த மாடசாமி விறகு வெட்டும் அரிவாளை கொண்டு பழனிவேலின் தலை மற்றும் கை, கால்களில் வெட்டிவிட்டு தப்பி ஓடிவிட்டாராம். இதில் படுகாயமடைந்த பழனிவேல் சிகிச்சைக்காக ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து பழனிவேல் அளித்த புகாரின் அடிப்படையில் ராமநாதபுரம் பஜார் போலீசார் வழக்குபதிவு செய்து மாடசாமியை கைது செய்தனர்.