மதுபாட்டிலுக்குள் கிடந்த குட்டி தவளை
பட்டிவீரன்பட்டி அருகே மதுபாட்டிலுக்குள் குட்டி தவளை கிடந்தது. இதனால் குடிமகன்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.;
பாட்டிலுக்குள் கிடந்த குட்டி தவளை
திண்டுக்கல் மாவட்டம் பட்டிவீரன்பட்டி அருகே உள்ள நெல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் பாண்டி (வயது 51). கூலித்தொழிலாளி. நேற்று மதியம் இவர், சித்தரேவு அரசு மதுபான கடைக்கு சென்று, ஒரு குவாட்டர் பாட்டில் வாங்கினார்.
பின்னர், அதனை திறந்து குடிப்பதற்காக மதுபாட்டிலை குலுக்கினார். அப்போது பாட்டிலுக்குள் ஏதோ ஒன்று மிதப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உற்று கவனித்து பார்த்தபோது, மதுபாட்டிலுக்குள் இறந்த நிலையில் குட்டி தவளை ஒன்று மிதந்து கொண்டிருந்தது.
குடிமகன்கள் அதிர்ச்சி
இதுகுறித்து பாண்டி, சித்தரேவு டாஸ்மாக் கடையின் விற்பனையாளரிடம் முறையிட்டார். ஆனால் அவர் முறையான பதில் அளிக்காமல், வேறு மதுபாட்டில் தருவதாக கூறி சமரசம் செய்ய முயன்றார்.
இதில் திருப்தியடையாத பாண்டி, மதுபாட்டிலை விற்பனையாளரிடம் கொடுக்காமல் தனது வீட்டுக்கே கொண்டு வந்து விட்டார். இதற்கிடையே மதுபாட்டிலுக்குள் குட்டி தவளை கிடந்த தகவல் காட்டுத்தீ போல பரவியது.
இதனையடுத்து நெல்லூர் கிராமத்தில் உள்ள அவரது வீட்டுக்கு ஏராளமானோர் வந்து மதுபாட்டிலுக்குள் கிடந்த குட்டி தவளை பார்த்து சென்றனர்.
மேலும் இது தொடர்பான வீடியோ, வாட்ஸ்-அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதனை பார்த்த குடிமகன்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
மேலும் இது தொடர்பாக விசாரணை நடத்தி, சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.