பருவமழை பெய்தும் வறண்டு கிடக்கும் கொசஸ்தலை ஆறு
பருவமழை பெய்தும் கோசஸ்தலை ஆறு வறண்டு காணப்படுகிறது.
கொசஸ்தலை ஆறு
கொசஸ்தலை ஆறு வேலூர் மாவட்டம் காவேரிப்பாக்கம் ஏரியில் தொடங்கி திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கேசவபுரம் அணைக்கட்டை வந்தடைகிறது. அங்கிருந்து பூண்டி ஏரியை வந்தடைகிறது. இந்த ஏரியில் இருந்து நீர் தாமரைப்பாக்கம் அணைக்கட்டுக்கு வந்து திருக்கண்டலம், இருளிப்பட்டி, ஜெகநாதபுரம், வண்ணிப்பாக்கம், தடுப்பணைகளை கடந்து வல்லூர் அணைக்கட்டுக்கு வருகிறது.
இங்கிருந்து இடையஞ்சாவடி, சடையங்குப்பம் போன்ற இடங்களில் உள்ள தடுப்பணையை கடந்து எண்ணூர் கடற்கரை வழியாக வங்க கடலில் கலக்கிறது.
பூண்டி ஏரி நிரம்பிய பிறகு பேபி கால்வாய் மற்றும் செங்குன்றம் கால்வாய் வழியாக உபரிநீர் திறக்கப்படுகிறது. இரு ஏரிகள் நிரம்பிய பின்னர் கூடுதலாக நீர் திறக்கப்பட்டு வீணாக கடலில் கலக்கும் நிலை ஏற்படுகிறது. தேவைக்கு அதிகமான நீரை தாமரைப்பாக்கம் வழியாக செல்லும் கொசஸ்தலை ஆற்றில் திறந்து விட்டால். நூற்றுக்கணக்கான ஏரிகள் நிரம்பும் நிலை ஏற்படும்.
விவசாயிகளின் வாழ்வாதாரம்
இதனால் மழை வெள்ளத்தை சேமிக்க முடியும். ஏற்கனவே வடகிழக்கு பருவ மழை காலத்தில் ஏற்பட்ட புயல்கள் மழையின் போது பல்வேறு பகுதிகளில் நீரில் மூழ்கிய நிலையில் பலத்த சேதங்களை ஏற்படுத்தி உள்ளது.
பூண்டி ஏரியில் நீர் வரத்தின் ஒரு பகுதியாக கொசஸ்தலை ஆற்றில் திறந்து விட்டால் அந்த பகுதியில் உள்ள விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுவதுடன் நீர் தேங்கும் நிலை உருவாகும் நிலத்தடி நீர்மட்டம் உயரும் கடல் நீர் உள்ளே போவது தடுக்கப்படுவதுடன் ஆழ்துளை கிணறுகள் மூலம் சுவையான குடிநீர் பொதுமக்களுக்கு கிடைப்பதுடன் விளைநிலங்களில் பயிரிடப்பட்டுள்ள நெற்பயிர்கள் நன்கு வளரும். இதனால் விவசாயிகளின் வாழ்வாதாரம் உயரும். ஆகவே பூண்டி ஏரியின் உபரிநீர் திறக்கும் போது வட பகுதியில் உள்ள மதகுகள் வழியாக கொசஸ்தலை ஆற்றுக்கு நீர் திறந்து விட வேண்டும் என விவசாயிகள் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.