தமிழக மீனவர் மீதான துப்பாக்கிச்சூடு சம்பவம் மிகுந்த வருத்தம் அளிக்கிறது - அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்
தமிழக மீனவர் மீதான துப்பாக்கிச் சூடு சம்பவம் மிகுந்த வருத்தம் அளிக்கிறது என்று அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கூறினார்.;
அமைச்சர்கள் ஆறுதல்
இந்திய கடற்படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் படுகாயம் அடைந்து, மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள மீனவர் வீரவேலை நேற்று அமைச்சர்கள் அனிதா ராதாகிருஷ்ணன், மூர்த்தி ஆகியோர் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர். மேலும் அவரிடம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்த ரூ.2 லட்சத்திற்கான காசோலையை வழங்கினர். மீனவருக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் என்ன? என்பது குறித்து அமைச்சர்கள், அரசு ஆஸ்பத்திரி டீன் ரத்தினவேலுவிடம் கேட்டறிந்தனர். மேலும் அவருக்கு தேவையான சிகிச்சை அளிக்க உத்தரவிட்டனர்.
மிகுந்த வருத்தம் அளிக்கிறது
அப்போது அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறுகையில், இந்திய கடற்படையால் சுடப்பட்ட மீனவர் வீரவேலின் வயிற்றிலும், தொடையிலும் குண்டுகள் பாய்ந்திருக்கிறது. தெற்கு மன்னார் வளைகுடா பகுதியில் மீன் பிடித்து கொண்டிருந்தபோது இந்திய கடற்படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தி இருக்கிறார்கள். அந்த மீனவர் சுயநினைவோடு தான் இருக்கிறார். அவரை காப்பாற்றி விடலாம் என டாக்டர்கள் கூறியிருக்கிறார்கள்.
அதன்படி அவருக்கு உரிய சிகிச்சை செய்யப்பட்டு வருகிறது. நம்முடைய மீனவர்கள் மீது இந்திய கடற்படை துப்பாக்கிச் சூடு நடத்தி இருப்பது மிகுந்த வருத்தம் அளிக்கிறது. எதற்காக இந்த துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது என்பது குறித்த விசாரணை நடந்து கொண்டு இருக்கிறது. அதன் பின்பு தான் உண்மையான காரணம் தெரிய வரும். எதுவாக இருந்தாலும் தொடர்ந்து தமிழக மீனவர்கள் தாக்கப்படுவது கண்டிக்கத்தக்கது.
இவ்வாறு அவர் கூறினார்.