அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு எதிராக ஐகோர்ட்டு தாமாக முன்வந்து வழக்குப்பதிவு..!

முறைகேடு செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் அமைச்சர் ஐ.பெரியசாமியை சிறப்பு கோர்ட்டு விடுவித்ததை எதிர்த்து நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்துள்ளார்.

Update: 2023-09-07 15:53 GMT

சென்னை,

அதிமுக மற்றும் திமுக அமைச்சர்களுக்கு எதிரான வழக்குகளில் விடுதலை வழங்கப்பட்ட வழக்குகளை சென்னை ஐகோர்ட்டு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன்வந்து மறுஆய்வு விசாரணைக்கு எடுத்து வருகிறார். இதுவரை 4 வழக்குகளை விசாரணைக்கு எடுத்துள்ளார். இந்த நிலையில் தற்போது இருவருக்கு எதிரான வழக்குகளை எடுத்துள்ளார்.

அந்த வகையில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் அமைச்சராக இருந்த ஐ.பெரியசாமி அவரது அதிகாரத்தை பயன்படுத்தி கடந்த 2008-ம் ஆண்டு முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் பாதுகாவலராக இருந்த கணேசனுக்கு வீட்டு வசதி வாரிய வீடுகளை ஒதுக்கி முறைகேடு செய்ததாக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் இருந்து அமைச்சர் ஐ.பெரியசாமி விடுவிக்கப்பட்டார். இந்த நிலையில் அமைச்சர் ஐ.பெரியசாமியை சிறப்பு கோர்ட்டு விடுவித்ததை எதிர்த்து நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்துள்ளார்.

மேலும் அதிமுக ஆட்சியில் சமூக நலத்துறை அமைச்சராக இருந்த வளர்மதி மீதும் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்துள்ளார். 2001-2006 வரை அமைச்சராக இருந்த வளர்மதி மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து வளர்மதி உள்ளிட்டோரை ஊழல் தடுப்பு சிறப்பு கோர்ட்டு விடுவித்ததை எதிர்த்து வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 2021-ல் பிறப்பித்த உத்தரவையும் மறு ஆய்வு செய்யும் வகையில் தாமாக முன்வந்து விசாரணை செய்ய உள்ளதாக நீதிபதி தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்