கருவில் உள்ள குழந்தைகளின் பாலினம் குறித்து கூறியதாக புகார்:ஸ்கேன் மையத்துக்கு சுகாதாரத்துறையினர் சீல் :தப்பி ஓடிய உரிமையாளருக்கு போலீஸ் வலைவீச்சு

கருவில் உள்ள குழந்தைகளின் பாலினம் குறித்து கூறியதாக வந்த புகாரை அடுத்து ஸ்கேன் மையத்துக்கு சுகதாரத்துறையினர் சீல் வைத்தனர். மேலும் தப்பி ஓடிய அதன் உரிமையாளரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2023-09-22 18:45 GMT


கள்ளக்குறிச்சி அருகே சிறுவங்கூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை இயங்கி வருகிறது. இதன் பின்புறம் அமைந்துள்ள காட்டுக்கொட்டாய் பகுதியில் ஒரு வீட்டில் ஒருவர், கர்ப்பிணிகளுக்கு கருவில் இருக்கும் சிசு ஆணா, பெண்ணா என ஸ்கேன் மூலம் பரிசோதனை செய்து, கருவின் பாலினம் பற்றி தெரிவிப்பதாக சுகாதார த்துறைக்கு புகார் சென்றது.

அதன் அடிப்படையில் சென்னை மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்ககம் நிர்வாக அலுவலர் கமலக்கண்ணன், கள்ளக்குறிச்சி மாவட்ட தேசிய நலக்குழுமம் பொறுப்பு அலுவலர் செந்தில்குமார் தலைமையிலான குழுவினர் நேற்று சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்தனர்.

எந்திரத்தை சேதம் செய்துவிட்டு தப்பி சென்றார்

அப்போது, கள்ளக்குறிச்சி விளாந்தாங்கல் ரோட்டில் வசிக்கும் அன்பழகன் மகன் வடிவேலு என்பவர் மருத்துவ படிப்பு படிக்காமல் கடந்த ஒரு ஆண்டுக்கு மேலாக, காட்டுக்கொட்டாயில் வாடகைக்கு ஒரு வீடு எடுத்து அங்கு ஸ்கேன் மையம் நடத்தி வந்துள்ளார்.

அங்கு வரும் கர்ப்பிணிகளுக்கு ஸ்கேன் செய்து, கருவில் உள்ள குழந்தையின் பாலினம் குறித்து தெரிவித்து வந்துள்ளார். அவருக்கு வீடு வாடகைக்கு கொடுத்த, சரசு என்பவர், உதவியாளராக இருந்து வந்துள்ளார்.

அதோடு, அங்கு, 2 கர்ப்பிணி பெண்களுக்கு ஸ்கேன் பரிசோதனை செய்து குழந்தை ஆணா, பெண்ணா என தெரிவிக்க தயார் நிலையில் பரிசோதனை அறிக்கை வைத்திருப்பது தெரிய வந்தது.

இதனிடையே, ஆய்வுக்குழு வருவதை எப்படியோ அறிந்து கொண்ட வடிவேலு ஸ்கேன் பரிசோதனை எந்திரத்தை சேதப்படுத்திவிட்டு அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் ஒருவருடன் தப்பி சென்றுவிட்டார். இதையடுத்து, ஸ்கேன் மையத்துக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.

போலீஸ் வலைவீச்சு

கருவின் பாலினம் தெரிவித்தல், முறையான கல்வி பயிலாமல் மருத்துவம் பார்த்தல், பொதுமக்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் வகையில் தொடர்ந்து மருத்துவம் பார்த்தல் உள்ளிட்ட குற்றத்திற்காக வடிவேலு மீதும், அவருக்கு உதவியாக இருந்த சரசு என்பவர் மீது கள்ளக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து, வலைவீசி தேடி வருகின்றனர்.

இதனிடையே கலெக்டர் ஷ்ரவன் குமார் செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தனியார் மருத்துவமனைகள், ஸ்கேன் மையங்கள் அல்லது தனிநபர்கள் கருவில் உள்ள சிசு ஆணா, பெண்ணா என்பது குறித்து கண்டிப்பாக தெரிவிக்க கூடாது. அரசின் விதிமுறைகளை மீறி செயல்படும் நபர்கள், ஸ்கேன் சென்டர்கள், மருத்துவமனைகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்