மாணவி முகத்தில் சூடு வைத்த தலைமை ஆசிரியை

மணிமங்கலம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் படிக்கும் மாணவியின் முகத்தில் தலைமை ஆசிரியை சூடு வைத்ததாக பெற்றோர் போலீசில் புகார் செய்தனர்.

Update: 2022-12-22 17:18 GMT

மணிமங்கலம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் படிக்கும் மாணவியின் முகத்தில் தலைமை ஆசிரியை சூடு வைத்ததாக பெற்றோர் போலீசில் புகார் செய்தனர்.

மாணவியின் முகத்தில் சூடு

திருவண்ணாமலையை அடுத்த மங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட மணிமங்கலம் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகின்றது.

இந்த பள்ளியில் 30-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். பள்ளியில் தலைமை ஆசிரியை மற்றும் ஆசிரியை என 2 பேர் பணிபுரிந்து வருகின்றனர். இந்த பள்ளியில் கெடாந்தாங்கல் கிராமத்தை சேர்ந்த முனியன் என்பவரின் மகள் கவுதமி (வயது 9) 4-ம் வகுப்பு படித்து வருகிறாள். இவள், சரிவர படிக்கவில்லை என்று கடந்த 2 நாட்களுக்கு முன்பு தீக்குச்சியை பற்ற வைத்து மாணவியின் முகத்தில் தலைமை ஆசிரியை உஷாராணி சூடு வைத்ததாக கூறப்படுகிறது.

இதனால் கன்னத்தில் காயம் அடைந்த மாணவி அழுது கொண்டே வீட்டிற்கு சென்று உள்ளாள். இதுகுறித்து மாணவியின் தாய் மணிமேகலை பள்ளிக்கு சென்று தலைமை ஆசிரியையிடம் கேட்ட போது முறையான பதில் அளிக்கவில்லை என கூறப்படுகிறது.

போலீசில் புகார்

இதனால் மணிமேகலை கிராம பொதுமக்களுடன் மங்கலம் போலீஸ் நிலையத்திற்கு சென்று பள்ளி தலைமை ஆசிரியை உஷாராணி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி புகார் மனு அளித்தார்.

அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த சம்பவம் குறித்து பள்ளிக்கல்வி துறை அதிகாரிகளும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்