அரசு பள்ளியில் புதிய கழிப்பிடம் கட்ட வேண்டும்

கோத்தகிரி அருகே அரசு பள்ளியில் புதிய கழிப்பிடம் கட்ட வேண்டும் என்று பெற்றோர்கள் கோரிக்கை விடுத்தனர்.

Update: 2022-06-18 14:03 GMT

கோத்தகிரி, 

கோத்தகிரி ஊராட்சி ஒன்றியம் ஜக்கனாரை ஊராட்சிக்கு உட்பட்ட தும்பூர் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் முதலாம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை 45 பேர் படித்து வருகின்றனர். பள்ளியில் மாணவ-மாணவிகளுக்கு கழிப்பிடம் ஒன்று கட்டப்பட்டு உள்ளது. இந்த கழிப்பிடம் உரிய பராமரிப்பின்றி காட்சி அளிக்கிறது. கழிப்பிடம் 300 மீட்டர் தொலைவில் உள்ளதால், மழைகாலங்களில் இயற்கை உபாதைகளை கழிக்க மாணவர்கள் சிரமப்பட்டு வருகின்றனர். அவ்வாறு நடந்து செல்லும் போது, அட்டை பூச்சிகள் மாணவர்களின் கால்களை கடித்து வருகின்றன. மேலும் தேங்கி நிற்கும் மழைநீரை கடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் மற்றும் கிராமசபை கூட்டங்களில் மனுக்கள் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, பள்ளி மாணவர்கள் எளிதில் பயன்படுத்தும் வகையில் புதிய கழிப்பிடம் பள்ளிக்கு அருகில் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர் மற்றும் பெற்றோர்கள் கோரிக்கை விடுத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்