தற்காலிக கால்நடை மருத்துவர்களின் கோரிக்கையினை அரசு பரிசீலித்திட வேண்டும் - எடப்பாடி பழனிசாமி

தற்காலிக கால்நடை உதவி மருத்துவர்கள், தங்களை பணி நிரந்தரம் செய்யக் கோரும் கோரிக்கையினை அரசு பரிசீலித்திட வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

Update: 2023-05-18 08:00 GMT

சென்னை,

தற்காலிக கால்நடை உதவி மருத்துவர்கள், தங்களை பணி நிரந்தரம் செய்யக் கோரும் கோரிக்கையினை அரசு பரிசீலித்திட வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழக அரசின் கால்நடை பராமரிப்புத்துத் துறையில் 2012-ஆம் ஆண்டுமுதல் வேலை வாய்ப்பு அலுவலகத்தின் மூலம் இனச் சுழற்சி அடிப்படையில், காலமுறை ஊதியத்தில் 80 பெண்கள் உள்ளிட்ட 454 தற்காலிக கால்நடை உதவி மருத்துவர்கள் பணிபுரிந்து வருகின்றனர். சுமார் 11 ஆண்டுகளாக, தற்காலிகமாக பணிபுரிந்துவரும் இவர்கள், தங்களது பணி நிரந்தரம் செய்யப்படும் என்று நினைத்திருந்த நிலையில், உச்சநீதிமன்றம் போட்டித் தேர்வு மூலமே நிரந்தரப் பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட முடியும் என்று உத்தரவிட்டதன் அடிப்படையில், மேற்கண்ட தற்காலிக கால்நடை உதவி மருத்துவர்கள் தமிழ் நாடு அரசுப் பணியாளர் போட்டித் தேர்வினை எழுதி உள்ளனர்.

இந்தக் கால்நடை உதவி மருத்துவர்கள், தாங்கள் கால்நடை மருத்துவப் படிப்பை முடித்து 30 ஆண்டுகளுக்குமேல் ஆகிவிட்டதால் சிலபஸ் (Syllabus) மாறுதல் மற்றும் தமிழ் நாடு அரசுப் பணியாளர் தேர்வு வாரியத்தின் தேர்வு முறையில் மாறுதல்கள் போன்றவை நடந்துள்ளதாகவும்; எனவே, சிறப்பு நேர்வாக தங்களது தற்காலிகப் பணியினை வரண்முறைப்படுத்த வேண்டி இன்று (18.05.2023) அறவழியில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்துவதாக அறிவித்துள்ளனர்.

இந்நிலையில், தற்காலிக கால்நடை உதவி மருத்துவர்கள் அனைவரும், தங்களுடைய பணி நிரந்தரம் செய்யப்படும் என நம்பி பணிபுரிந்து வந்த நிலையில், தங்களுக்கு 50 வயது கடந்துவிட்டதைக் கருத்தில்கொண்டு, தற்போது TNPSC தேர்வு எழுதியுள்ள தங்களுக்கு, வேலை வாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு (சீனியாரிட்டி) மற்றும் தற்காலிகமாக உதவி கால்நடை மருத்துவர்களாக பணிபுரிந்த ஆண்டு சீனியாரிட்டி ஆகிய இரண்டின் அடிப்படையிலும் சிறப்பு ஊக்க மதிப்பெண் கூடுதலாக வழங்கிடுமாறு, அவர்கள் வைத்துள்ள கோரிக்கையினை பரிசீலிக்க வேண்டும் என்று அரசை கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்