அரசு மருத்துவர்களின் நியாயமான கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும் - ராமதாஸ் வலியுறுத்தல்
அரசு மருத்துவர்களுடன் தமிழக அரசு பேச்சு நடத்தி அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்! என்று ராமதாஸ் கூறியுள்ளார்.;
சென்னை,
மத்திய அரசு மருத்துவர்களுக்கு இணையான ஊதிய விகிதம் உள்ளிட்ட 10 கோரிக்கைகளை வலியுறுத்தி சாகும்வரை உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ள அரசு மருத்துவர்களுடன் தமிழக அரசு பேச்சு நடத்தி அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், 'மத்திய அரசு மருத்துவர்களுக்கு இணையான ஊதிய விகிதம் உள்ளிட்ட 10 கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக அரசு மருத்துவர்கள் சங்க நிர்வாகிகள் மேட்டூரில் உள்ள மறைந்த அரசு மருத்துவர் சங்கத்தலைவர் லட்சுமி நரசிம்மன் நினைவிடத்தில் சாகும்வரை உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளனர்.
அரசு மருத்துவர்கள் சங்கத்தினர் தங்களின் கோரிக்கைகள் குறித்து முதலமைச்சரிடம் 5 முறை கோரிக்கை வைத்துள்ளனர். மருத்துவத்துறை அமைச்சரை 14 முறையும், செயலாளரை எண்ணற்ற முறையும் சந்தித்து கோரிக்கைகளை வலியுறுத்தியுள்ளனர். ஆனால், இதுவரை எந்த முன்னேற்றமும் இல்லை.
அரசு மருத்துவர்களின் கோரிக்கைகள் நியாயமானவை. இக்கோரிக்கைகளை நிறைவேற்றும்படி பலமுறை நான் வலியுறுத்தியுள்ளேன். இந்த கோரிக்கைகள் நியாயமானவை என்பதை இன்றைய முதலமைச்சரும் ஏற்றுக் கொண்டிருக்கிறார். அதன் பிறகும் அவற்றை ஏற்க மறுப்பது நியாயமல்ல.
மருத்துவர்களின் உண்ணாநிலை மூன்றாவது நாளாக இன்றும் நீடிக்கும் நிலையில், அவர்களின் உடல்நிலை பாதிக்கப்படும் ஆபத்து உள்ளது. இதைக் கருத்தில் கொண்டு அரசு மருத்துவர்களுடன் தமிழக அரசு பேச்சு நடத்தி அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்!' என்று கூறியுள்ளார்.