மேய்ச்சலுக்கு சென்று திரும்பிய பசு, 5 ஆடுகள் செத்தன

தீவட்டிப்பட்டி அருகே மேய்ச்சலுக்கு சென்று திரும்பிய பசு மற்றும் 5 ஆடுகள் செத்தன. அவை விஷம் வைத்து கொல்லப்பட்டதா? என போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Update: 2023-04-07 19:44 GMT

ஓமலூர்

தீவட்டிப்பட்டி அருகே மேய்ச்சலுக்கு சென்று திரும்பிய பசு மற்றும் 5 ஆடுகள் செத்தன. அவை விஷம் வைத்து கொல்லப்பட்டதா? என போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கால்நடைகள் திடீர் சாவு

தீவட்டிப்பட்டி அருகே செக்காரப்பட்டி கோம்பைக்காட்டை சேர்ந்தவர் கிருஷ்ணன் (வயது 50), விவசாயி. இவர் 70 வெள்ளாடுகள் மற்றும் 7 பசு மாடுகளை வளர்த்து வருகிறார். இந்த கால்நடைகளுக்கு நேற்று முன்தினம் வழக்கம்போல் கிருஷ்ணன் மற்றும் அவருடைய மனைவி கோமதி ஆகிய இருவரும் காலையில் தண்ணீர் வைத்து விட்டு மேய்ச்சலுக்கு அனுப்பினர்.

பின்னர் மதியம் 11 மணியளவில் பசு மாட்டை பிடித்து தண்ணீர் வைத்து உள்ளனர். தண்ணீர் குடித்த சிறிது நேரத்தில் பசு சுருண்டு விழுந்து இறந்தது. இதனால் அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அதன்பிறகு சிறிது நேரம் கழித்து மேய்ச்சலுக்கு சென்ற ஆடுகள் திரும்ப வந்தன.

அப்போது கோமதி தனது கணவர் கிருஷ்ணனிடம் ஆடுகளுக்கு சென்று தண்ணீர் வைக்கும் படி கூறியுள்ளார். கிருஷ்ணன் அங்கு சென்று பார்த்த போது 4 ஆட்டுக்குட்டிகளும், ஒரு ஆடும் இறந்து கிடந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் உடனடியாக மீதமுள்ள ஆடுகளை தண்ணீர் குடிக்க விடாமல் விரட்டி விட்டு சிறிது தண்ணீரை பாத்திரத்தில் எடுத்து வைத்துவிட்டு மீதி தண்ணீரை கீழே ஊற்றி உள்ளனர்.

8 ஆடுகள் வரவில்லை

மேலும் மேய்ச்சலுக்கு சென்ற 8 ஆடுகள் திரும்பி வராததால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் இந்த சம்பவம் குறித்து நேற்று முன்தினம் இரவு தீவட்டிப்பட்டி போலீசில் புகார் கொடுத்தனர்.

இந்த புகாரின் பேரில் தீவட்டிப்பட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கருப்பண்ணன் நேற்று காலை சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார். மேலும் தடயஅறிவியல் நிபுணர் செந்தில்குமார், கால்நடை மருத்துவர் நவீன் குமரவேல் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று இறந்த ஆடுகள், மாட்டை பிரேத பரிசோதனை செய்தனர்.

விஷம் வைத்து கொல்லப்பட்டதா?

மேலும் தண்ணீர் குடித்து விட்டு மேய்ச்சலுக்கு சென்ற 8 ஆடுகளும் வனப்பகுதியில் இறந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இதனை அவர்கள் தேடி வருகின்றனர். முன்விரோதத்தால் யாராவது தண்ணீரில் விஷம் கலந்து ஆடுகள், மாட்டை கொல்ல சதி செய்தார்களா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம் அப்பகுதியில் கால்நடைகள் வளர்ப்போர் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்