வரத்து வாய்க்காலில் அடைப்பு ஏற்படுத்தி தண்ணீர் வராமல் தடுக்கும் கும்பல்

திருக்கோவிலூர் பெரிய ஏரிக்கு வரத்து வாய்க்காலில் அடைப்பு ஏற்படுத்தி தண்ணீர் வராமல் தடுக்கும் கும்பல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

Update: 2023-09-05 18:45 GMT

திருக்கோவிலூர்

பெரிய ஏரி

திருக்கோவிலூர் பெரிய ஏரியில் உள்ள தண்ணீரை பயன்படுத்தி சுற்றியுள்ள பகுதியை சேர்ந்த விவசாயிகள் பயிர் சாகுபடி செய்து வருகிறார்கள். தற்போது இந்த ஏரியில் குறைந்த அளவிலேயே தண்ணீர் உள்ளது. இதனால் மழை பெய்து ஏரி நிரம்பாதா என்ற எதிர்பார்ப்பு விவசாயிகளிடையே இருந்து வருகிறது. இந்த நிலையில் தென்பெண்ணை ஆற்றில் தற்போது மழை நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்த ஆற்றில் இருந்து வரத்து வாய்க்கால் மூலம் திருக்கோவிலூர் பெரிய ஏரிக்கு தண்ணீர் வரும். ஆனால் கடந்த சில தினங்களாக நீர் வரத்து வாய்க்காலில் மர்ம கும்பல் இரும்பு ஷீட்டை வைத்து அடைப்பை ஏற்படுத்தி ஏரிக்கு தண்ணீர் வராமல் தடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஏரியில் மீன்கள் உள்ளன. தண்ணீர் நிரம்பினால் மீன்பிடிப்பது சிரமம். தண்ணீர் குறைவாக இருக்கும் போது தான் மீன் பிடிக்க முடியும் என்பதால் தென்பெண்ணை ஆற்றில் ஓடும் தண்ணீரை ஏரிக்கு வரவிடாமல் தடுப்பதாக கூறப்படுகிறது. ஆனால் ஏரியில் தண்ணீர் இல்லாமல் போனால் விவசாயம் பாதிக்கும் அபாயம் உருவாகும் என விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.

குடிநீர் பிரச்சினை

மேலும் ஏரியில் தண்ணீர் நிரம்பி இருக்கும் போது திருக்கோவிலூர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் உயரும். ஆனால் தண்ணீர் இல்லாத பட்சத்தில் நிலத்தடி நீர் மட்டம் குறைந்து விவசாயம் மற்றும் குடிநீர் பிரச்சினை ஏற்பட வாய்ப்புகள் அதிகம் உள்ளது. அக்டோபர் மாதம் இறுதியில் தொடங்க உள்ள வடகிழக்கு பருவ மழையும் எவ்வாறு இருக்கும் என்பது தொியவில்லை.

இந்த நிலையில் தமிழகம், புதுச்சேரி பகுதியில் 5 நாட்கள் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதனால் தென்பெண்ணை ஆற்றில் நீர் வரத்து மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

நடவடிக்கை வேண்டும்

எனவே ஆற்றில் வீணாக ஓடி கடலில் கலக்கும் தண்ணீரை பெரிய ஏரியில் சேமித்து பயன்படுத்த பொதுப்பணித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதோடு நீர் வரத்து வாய்க்காலில் அடைப்பை ஏற்படுத்தி ஏரிக்கு தண்ணீர் வராமல் தடுத்க்கும் கும்பல் மீது நடவடிக்கை எடு்க்க வேண்டும் என விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்