ஓய்வு பெற்ற காவல் துறை அலுவலர்களின் நியாயமான கோரிக்கைகளை முதல்-அமைச்சரிடம் வலியுறுத்தி நிறைவேற்றி தருவேன்முன்னாள் டி.ஜி.பி. தேவாரம் பேச்சு

ஓய்வு பெற்ற காவல் துறை அலுவலர்கள் சங்கம் 3 ஆக உள்ளதை ஒன்றாக இணைத்தால் அவர்களது நியாயமான கோரிக்கைகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வலியுறுத்தி நிறைவேற்றி தருவேன் என திருப்பத்தூரில் நடந்த மாநில அளவிலான கூட்டத்தில் முன்னாள் டி.ஜி.பி.தேவாரம் பேசினார்.

Update: 2022-08-06 18:49 GMT

திருப்பத்தூர்

ஓய்வு பெற்ற காவல் துறை அலுவலர்கள் சங்கம் 3 ஆக உள்ளதை ஒன்றாக இணைத்தால் அவர்களது நியாயமான கோரிக்கைகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வலியுறுத்தி நிறைவேற்றி தருவேன் என திருப்பத்தூரில் நடந்த மாநில அளவிலான கூட்டத்தில் முன்னாள் டி.ஜி.பி.தேவாரம் பேசினார்.

மாநில அளவிலான கூட்டம்

தமிழ்நாடு ஓய்வு பெற்ற காவல் துறை அலுவலர்கள் நலச்சங்கம் சார்பில் மாநில அளவிலான கூட்டம் திருப்பத்தூர் ெரயில்வே ஸ்டேஷன் ரோட்டில் உள்ள எஸ்.ஆர்.கன்வென்ஷன் அரங்கத்தில் நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாநில தலைவர் கே.சிவசுப்பிரமணியம் தலைமை வகித்தார். பொதுச் செயலாளர் கணேசன் முன்னிலை வகித்தார். கவுரவ தலைவர் எம்.ராஜா முகமது வரவேற்றார், கூட்டத்தில் ஓய்வு பெற்ற முன்னாள் டி.ஜி.பி. வால்டர் தேவாரம் கலந்து கொண்டார்.

அப்போது அவர் பேசுகையில், ''தமிழ்நாடு ஓய்வு பெற்ற காவல் துறை அலுவலர் சங்கம் மூன்று சங்கமாக உள்ளது. அதனை ஒன்றாக இணைக்க உள்ளதாக கூறியுள்ளீர்கள். அப்படி இணைத்தால் ஓய்வு பெற்ற காவல்துறை அலுவலர்களின் நியாயமான கோரிக்கைகளை தமிழக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலினை நேரில் சந்தித்து அவரிடம் நான் வலியுறுத்தி பெற்று தருகிறேன்'' என்றார்.

தீர்மானங்கள்

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

ஓய்வு பெற்ற காவல் துறையினர் நீதிமன்றத்தை நாடியும் பதவி உயர்வு கிடைக்காமல் நிலுவையில் உள்ளது. எனவே பதவி உயர்வு மற்றும் அதற்கு உண்டான பண பலன்களை தருமாறு தமிழக அரசை கேட்டுக் கொள்வது.அனைத்து மாவட்ட காவலர் கேன்டீன்களிலும் உயிர் காக்கும் மருந்து பிரிவு ஒன்றை அமைத்து தரவேண்டும். அதில் ஓய்வு பெற்ற ஓய்வூதியர்களின் வாரிசுகளுக்கு வேலை வாய்ப்பு வழங்க வேண்டும். சீருடை பணியாளர் தேர்வு மையம் நடத்தும் காவலர் மற்றும் உதவி ஆய்வாளர் பணி தேர்வுகளில் ஓய்வூதியர்களின் வாரிசுதாரர்களுக்கு 5 சதவீதம் மதிப்பெண்களை வழங்க வேண்டும்.

ஓய்வு பெற்ற காவல் துறை வாரிசுகளுக்கு பணி நியமனங்களில் 10 சதவீதம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் சேலம், தர்மபுரி, கோவை, கிருஷ்ணகிரி, வேலூர், மதுரை, நெல்லை, தென்காசி, ராமநாதபுரம் உள்பட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

முடிவில் பொருளாளர் தரணி நன்றி கூறினார். 

Tags:    

மேலும் செய்திகள்