கோவில் கட்ட வனத்துறையினர் எதிர்ப்பு

திருவெண்ணெய்நல்லூர் அருகே கோவில் கட்ட வனத்துறையினர் எதிர்ப்பு தெரிவித்ததை கண்டித்து கிராமமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Update: 2023-07-08 18:45 GMT

திருவெண்ணெய்நல்லூர், 

திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள திருமுண்டீச்சரத்தில் அங்காளம்மன் கோவில் கிராம மக்கள் சார்பில் கட்டப்பட்டு வருகிறது. அதன்படி நேற்று கோவிலில் கட்டுமான பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்தது. இந்த நிலையில் வன சார்பு ஆய்வாளர் மணி தலைமையிலான வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் அவர்கள், கோவில் கட்டப்பட்டு வரும் இடம் வனத்துறைக்கு சொந்தமானது. எனவே இங்கு கோவில் கட்டக்கூடாது என்று கூறி எதிர்ப்பு தெரிவித்து பணியை தடுத்து நிறுத்தினர். இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் அங்குள்ள அரசூர் - திருவெண்ணெய்நல்லூர் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இது பற்றி தகவல் அறிந்த திருவெண்ணெய்நல்லூர் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர்கள் வினோத்ராஜ், சவுந்தர்ராஜன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்ட மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது போலீசார் கூறுகையில், தற்போது கோவில் கட்டப்பட்டு வரும் இடம் வனத்துறைக்கு சொந்தமானது. எனவே இங்கு கோவில் கட்ட வேண்டும் என்றால் அரசிடம் உரிய அனுமதி பெற்று கட்ட வேண்டும் என தெரிவித்தனர். அதனை ஏற்று கிராமமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்