மதுரையில் கனமழை: சென்னையில் இருந்து வந்த விமானம் திருச்சி விமான நிலையத்துக்கு திருப்பி அனுப்பிவைப்பு
சென்னையில் இருந்து மதுரை வந்த விமானம் கனமழை காரணமாக திருச்சி விமான நிலையத்திற்க்கு திருப்பி அனுப்பிவைக்கப்பட்டது.
திருப்பரங்குன்றம், திருநகர், ஹார்விப்பட்டி மற்றும் திருப்பரங்குன்றத்தை சுற்றி உள்ள பல்வேறு கிராம பகுதிகளில் நேற்று மாலை 6 மணியளவில் இடி, மின்னல் மற்றும்சூறாவளி காற்றுடன் மழை கொட்டியது. சுமார் 2 மணிநேரம் மழை பெய்தது. இதில் ரோட்டில் பள்ளமான பகுதிகளில் மழை நீர் வெள்ளமாக ஓடியது. அதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் 6 மணியிலிருந்து இரவு முழுவதுமாக மின்சாரம் நிறுத்தப்பட்டது.
இந்நிலையில் சென்னை விமான நிலையத்திலிருந்து இண்டிகோ விமானம் நேற்று மாலை 78 பயணிகளுடன் மதுரை நோக்கி வந்தது. இந்த விமானம் மதுரையை நெருங்கிக் கொண்டிருந்தபோது மதுரை விமான நிலையம் பகுதியில் கனமழை பெய்தது.
இதனால் இண்டிகோ விமானம் தரையிறங்க முடியாத நிலை ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து இந்த விமானம் திருச்சி விமான நிலையத்துக்கு திருப்பி அனுப்பப்பட்டு இரவு 7.40 மணிக்கு திருச்சி விமான நிலையத்தை வந்தடைந்தது.
பின்னர் மதுரை விமான நிலையம் பகுதியில் விமானம் தரை இறங்குவதற்கான சூழ்நிலை ஏற்பட்டதை தொடர்ந்து இந்த விமானம் மீண்டும் இரவு 8.10 மணிக்கு மதுரை விமான நிலையம் நோக்கி திருச்சி விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு சென்றது.