ஏரியில் மீன்கள் செத்து மிதந்தன
சேமூரில் ஏரியில் திடீரென மீன்கள் செத்து மிதந்தன.;
வெண்ணந்தூர்
சேமூர் ஏரி
வெண்ணந்தூரை அடுத்த ஓ சவுதாபுரம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட பகுதியில் உள்ள சேமூர் ஏரி உள்ளது. சேலம் சேர்வராயன் மலைப்பகுதியில் இருந்து தண்ணீர் மணிமுத்தாறு வழியாக இந்த ஏரியை வந்தடைகிறது. இந்த நிலையில் கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு சேலம் பகுதியில் பெய்த தொடர் மழையினால் இந்த ஏரி நிரம்பி உள்ளது.
மேலும் ஏரியின் மீன்பிடி குத்தகை ஏலம் பல ஆண்டுகளாக விடாமல் கிடப்பில் உள்ளது. இந்தநிலையில் திடீரென ஏரியில் மீன்கள் செத்து மிதந்தன. இதை கண்ட அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் மர்மநபர்கள் யாரேனும் ஏரியில் விஷம் கலந்ததால் மீன்கள் செத்து இருக்கலாம். அல்லது புதிதாக ஏரிக்கு வந்த தண்ணீரில் சாயக்கழிவு அதிகளவு வந்திருந்ததாலும் மீன்கள் இறந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.
அப்புறப்படுத்த வேண்டும்
இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனத்தில் கொண்டு இது போன்ற அசம்பாவிதங்கள் நடைபெறாமல் இருக்க விரைந்து மீன்பிடி குத்தகை ஏலம் விட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். மேலும் தற்போது ஏரியில் செத்து மிதக்கும் மீன்களை அப்புறப்படுத்தி துர்நாற்றத்தை போக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.