சமூகநீதி அடிப்படையில் ஆட்சி செய்பவர் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

சமூகநீதி அடிப்படையில் ஆட்சி செய்பவர் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் என்று அமைச்சர் பொன்முடி கூறினார்.

Update: 2022-05-26 18:26 GMT

திருக்கோவிலூர், 

திருக்கோவிலூர் அருகே முகையூர் ஊராட்சி ஒன்றியத்தை சேர்ந்த பரனூர் கிராமத்தில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடந்தது. இதற்கு கலெக்டர் மோகன் தலைமை தாங்கினார். புகழேந்தி எம்.எல்.ஏ., மாவட்ட திட்ட இயக்குனர் சங்கர், ஒன்றியக்குழு தலைவர் தனலட்சுமி உமேஸ்வரன், துணைத் தலைவர் பி.மணிவண்ணன், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர்கள் ஜி. ரவிச்சந்திரன், அ.சா.ஏ.பிரபு, எம்.ஆர்.ராஜீவ் காந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட கலால் உதவி ஆணையர் சிவா வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கலந்து கொண்டு பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார். தொடர்ந்து 190 பேருக்கு ரூ.32 லட்சம் செலவில் நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

தமிழகத்தில் மு.க.ஸ்டாலின் முதல்-அமைச்சராக பொறுப்பேற்று ஒரு ஆண்டு தான் ஆகிறது. ஆனால் இந்த காலகட்டத்தில் செய்திட்ட சாதனைகள் வரலாறு படைக்கின்ற வகையில் அமைந்துள்ளது. சமுதாயத்தில் பெண்கள் உயர்ந்த நிலையை அடைய வேண்டும் என்ற நோக்கில் நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் 50 சதவீதம் பெண்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கி சாதனை படைத்தார். அரசு பஸ்களில் மகளிருக்கு இலவச பஸ் பாஸ் வழங்கினார். தி.மு.க. ஆட்சி காலத்தில் தான் மகளிருக்கு சொத்துரிமை வழங்கப்பட்டது. அடித்தட்டு மக்களும் வாழ்வில் முன்னேறும் வகையில் சமூக நீதி அடிப்படையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சி செய்து வருகிறார். இவ்வாறு அவர் கூறினார். நிகழ்ச்சியில் திருக்கோவிலூர் நகர மன்றதலைவர் டி.என்.முருகன், துணை தலைவர் உமாமகேஸ்வரிகுணா, பேரூராட்சி மன்ற தலைவர் வக்கீல் ராயல் எஸ்.அன்பு, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சீனுவாசன், சாம்ராஜ், அலுவலக மேலாளர் கண்ணதாசன், வேளாண்மை துறை உதவி இயக்குனர் கனகலிங்கம், வேளாண்மை அலுவலர் சிவகாமி, நகரமன்ற உறுப்பினர் ஐ.ஆர். கோவிந்தராஜன், தொ.மு.ச.நிர்வாகி டி.கே.சரவணன், தகவல் தொழில் நுட்ப அணி நிர்வாகி என்.கே.வி.ஆதிநாரயணமூர்த்தி, ஊராட்சி மன்ற தலைவர் பழனியம்மாள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் கண்டாச்சிபுரம் தாசில்தார் கார்த்திகேயன் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்