பலியான மாணவனின் உடலுக்கு அஞ்சலி செலுத்த வந்த எம்.எல்.ஏ.வை முற்றுகையிட்ட குடும்பத்தினர்

ஆரணியில் அரசு பள்ளியில் ஏற்பட்ட மோதலில் பலியான மாணவனின் உடலுக்கு அஞ்சலி செலுத்த வந்த எம்.எல்.ஏ.வை குடும்பத்தினர் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2023-04-01 08:46 GMT

திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் ஒன்றியம் ஆரணி சுப்பிரமணிய நகர் பகுதியை சேர்ந்த பாஸ்கரன் என்பவரது மகன் தமிழ்ச்செல்வன். இவன் அங்குள்ள அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தான். இந்நிலையில், இவனுக்கும் அதே பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்த மாணவனுக்கும் நேற்று முன்தினம் இடையே மோதல் ஏற்பட்டது. இதில், தமிழ்ச்செல்வனுக்கு காயம் ஏற்பட்டு மயங்கி விழுந்தான். இதையடுத்து அந்த மாணவனை மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்து போனான். இந்நிலையில், சென்னை ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனை முடிந்து தமிழ்ச்செல்வன் உடலை சுப்பிரமணிய நகரில் உள்ள அவனது வீட்டுக்கு நேற்று மாலை கொண்டு வந்தனர்.

அப்போது மாணவன் உடலுக்கு திருவள்ளூர் கிழக்கு மாவட்ட பா.ஜ.க. தலைவர் செந்தில்குமார் மாலை அணிவித்து மாணவன் குடும்பத்துக்கு ஆறுதல் கூறிவிட்டு சென்றார். இதன் பின்னர், பொன்னேரி தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ.துரைசந்திரசேகர், ஆரணி பேரூராட்சி மன்றத்துணைத் தலைவர் வக்கீல் சுகுமார் மற்றும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் வந்து தமிழ்ச்செல்வன் உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தி விட்டு குடும்பத்துக்கு ஆறுதல் கூறினர்.

அப்போது துரைசந்திரசேகர் எம்.எல்.ஏ.வை தமிழ்செல்வனின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் முற்றுகையிட்டு இறந்த மாணவனின் குடும்பத்துக்கு தமிழக அரசு சார்பில் உரிய நஷ்ட ஈடு வழங்க வேண்டும். மாணவன் இறப்புக்கு காரணமானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

எதிர்காலத்தில் இப்பள்ளியில் இது போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க கண்காணிப்பு கேமரா உள்ளிட்ட முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் சுமார் 1 மணி நேரம் ஆரணி-பாலவாக்கம் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதன் பின்னர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் உரிய நடவடிக்கை எடுப்பதாக சட்டமன்ற உறுப்பினர் உறுதி கூறினார். இதன் பின்னர், அனைவரும் அமைதியாக கலைந்து சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்