தப்பி ஓடிய கைதி சித்தூரில் சிக்கினார்
அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் இருந்து தப்பி ஓடிய சிறை கைதியை ஜெயில் போலீசார் அடங்கிய தனிப்படையினர் ஆந்திர மாநிலம் சித்தூரில் மடக்கி பிடித்தனர்.
கைதி தப்பி ஓட்டம்
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியை அடுத்த உதயேந்திரம் பகுதியை சேர்ந்தவர் ராஜா (வயது 44), தொழிலாளி. இவர் கடந்த 2022-ம் ஆண்டு பாலியல் பலாத்கார வழக்கில் வாணியம்பாடி போலீசாரால் போக்சோவில் கைது செய்யப்பட்டு வேலூர் மத்திய ஆண்கள் ஜெயிலில் அடைக்கப்பட்டார்.
ராஜாவுக்கு கடந்த 13-ந் தேதி திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அந்த அறையின் முன்பாக ஜெயில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் ராஜா கழிவறைக்கு சென்று வருவதாக போலீசாரிடம் கூறிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.
சித்தூரில் சிக்கினார்
அவரை போலீசார் தீவிரமாக தேடிவந்தனர். இந்த நிலையில் ஆந்திர மாநிலம் சித்தூரில் அவருடைய உறவினர்களிடம் இருப்பதாக சக கைதிகளிடம் கூறிய தகவல் ஜெயில் போலீசார் அடங்கிய தனிப்படையினருக்கு தெரிய வந்தது. இதையடுத்து தனிப்படையினர் நேற்று முன்தினம் இரவு சித்தூருக்கு சென்று பல்வேறு இடங்களில் ராஜாவை தீவிரமாக தேடும் பணியில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் நேற்று காலை ராஜா சித்தூர் பஸ்நிலையம் அருகே ஒரு ஆட்டோவில் ஏற முயன்றார். இதைக்கண்ட தனிப்படையினர் அவரை மடக்கி பிடித்தனர். பின்னர் அவரை அங்கிருந்து வேனில் வேலூர் தாலுகா போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். அப்போது அவர் கண்ணமங்கலம் கூட்ரோட்டில் பகுதியில் பதுங்கி இருந்து இரவில் ஆந்திரா செல்லும் பஸ்சில் ஏறியதாக தெரிவித்தார். இதையடுத்து ராஜா மீண்டும் வேலூர் மத்திய ஜெயிலில் அடைக்கப்பட்டார்.