அமைச்சர் செந்தில்பாலாஜி வீடு உள்பட 7 இடங்களில் அமலாக்கத்துறையினர் அதிரடி சோதனை

கரூரில் அமைச்சர் செந்தில்பாலாஜி வீடு உள்பட 7 இடங்களில் அமலாக்கத்துறையினர் அதிரடியாக சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

Update: 2023-06-13 18:43 GMT

லஞ்சம் பெற்றதாக புகார்

கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக தற்போதைய மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி இருந்தார். அப்போது போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி லஞ்சம் பெற்றதாக புகார் எழுந்தது. இந்த விவகாரம் தொடர்புடைய வழக்கில் அமலாக்கத்துறை அளித்த சம்மனை ரத்து செய்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது. இதை எதிர்த்து அமலாக்கத்துறை சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தது.

அப்போது சுப்ரீம் கோர்ட்டு வழங்கிய தீர்ப்பில் தமிழ்நாடு போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக கூறிய புகார்களை மீண்டும் புதிதாக விசாரிக்க வேண்டும். அமலாக்கத்துறை சம்மனை ரத்து செய்கிறோம் என்ற சென்னை ஐகோர்ட்டு உத்தரவுகள் ரத்து செய்யப்படுகின்றன. அமலாக்கத்துறை விசாரணைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட கோர்ட்டு அவமதிப்பு வழக்குகள் தள்ளுபடி செய்யப்படுகின்றன.

2 மாதங்களுக்குள் இறுதி அறிக்கை

போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக வந்த புகார்கள் தொடர்பாக ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குகளை பதிவு செய்து மத்திய குற்றப்பிரிவு விசாரணை அதிகாரி விசாரித்து 2 மாதங்களுக்குள் இறுதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இந்த விவகாரத்தை அமலாக்கத்துறை தொடர்ந்து விசாரிக்கலாம் என தீர்ப்பு வழங்கியது.

இந்தநிலையில் தமிழகத்தில் டாஸ்மாக் மற்றும் மின்சாரத்துறையில் டெண்டர் எடுத்த ஒப்பந்ததாரர்கள் மீது வருமான வரித்துறைக்கு வரி ஏய்ப்பு புகார்கள் வந்தது. இதையடுத்து கடந்த மாதம் 26-ந்தேதி ஒப்பந்ததாரர்களுடைய வீடு மற்றும் அலுவலகங்களில் ஒரே நேரத்தில் சோதனை நடத்த வருமான வரித்துறை அதிகாரிகள் வந்தனர்.

உணவகத்திற்கு 'சீல்'

மேலும், கரூரில் அமைச்சர் செந்தில்பாலாஜி சகோதரர் அசோக்குமார் வீடு, அமைச்சரின் உறவினர்கள், நண்பர்கள் வீடு, அலுவலகம் உள்பட 10-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அப்போது அமைச்சரின் சகோதரர் அசோக்குமார் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்த தி.மு.க.வினர் எதிர்ப்பு தெரிவித்தனர். வருமான வரித்துறை அதிகாரிகள் வந்த கார் சேதப்படுத்தப்பட்டது. அங்கு நிலவிய அசாதாரண சூழ்நிலையை உணர்ந்து கொண்டு சோதனையை கைவிட்டு அதிகாரிகள் திரும்பி சென்றனர். பின்னர் இதுதொடர்பாக வருமான வரித்துறை அதிகாரிகள் போலீசில் புகார் அளித்தனர்.

அதையடுத்து மத்திய பாதுகாப்பு படை வீரர்களின் பாதுகாப்புடன் வருமான வரித்துறை அதிகாரிகள் கரூரில் பல்வேறு இடங்களில் சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனை தொடர்ந்து 8 நாட்கள் நடைபெற்றது. அப்போது நடைபெற்ற சோதனையின் போது ஒரு அலுவலகம் மற்றும் உணவகத்திற்கு வருமான வரித்துறை அதிகாரிகள் 'சீல்' வைத்தனர். மேலும் சில ஆவணங்களை வருமான வரித்துறை அதிகாரிகள் எடுத்து சென்றதாக கூறப்படுகிறது.

கரூரில் 7 இடங்களில்...

இந்தநிலையில் அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு தொடர்புடைய பல்வேறு இடங்களில் நேற்று காலை முதல் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அந்த வகையில் கரூரிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் அமைச்சர் செந்தில்பாலாஜி, அவரது சகோதரர் அசோக்குமார் வீடு உள்பட 7 இடங்களில் சோதனையில் ஈடுபட்டனர். இதையொட்டி சென்னை மற்றும் கேரளாவை சேர்ந்த அமலாக்கத்துறையினர் 10-க்கும் மேற்பட்ட கார்களில் 40-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் கரூருக்கு வருகை தந்தனர்.

கரூர் அருகே உள்ள ராமேஸ்வரப்பட்டியில் உள்ள செந்தில்பாலாஜியின் வீட்டிற்கு 5 கார்களில் வந்த 10-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் காலை 8.30 மணிக்கு வந்து சோதனை மேற்கொண்டனர். அப்போது வீட்டின் முன்பு துப்பாக்கி ஏந்திய மத்திய துணை ராணுவப்படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

சோதனையின்போது வீட்டில் இருந்தவர்களை வெளியில் செல்ல அனுமதிக்கவில்லை. அதேபோல் வெளியாட்கள் வீட்டின் உள்ளே செல்லவும் அனுமதிக்கவில்லை.

துணை ராணுவப்படையினர்

கரூர் ராமகிருஷ்ணபுரத்தில் உள்ள செந்தில்பாலாஜியின் சகோதரர் அசோக்குமார் வீட்டிலும், ராயனூரில் உள்ள கொங்கு மெஸ் சுப்பிரமணி வீட்டிலும், செங்குந்தபுரத்தில் உள்ள ஆடிட்டர் சதீஷ்குமார் அலுவலகம், வேலாயுதம்பாளையத்தில் உள்ள கார்த்திக் என்பவர் வீட்டிலும் அமலாக்கத்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர். இவர்கள் வீடுகளிலும் துப்பாக்கி ஏந்திய மத்திய துணை ராணுவப்படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். இந்த சோதனை இரவு 10 மணியளவில் நிறை வடைந்தது.

நகைக்கடை

இதேபோல் கரூரில் உள்ள ஒரு நகைக்கடை மற்றும் ஈரோடு சாலையில் உள்ள ராமவிலாஸ் வீவிங் பேக்டரியின் உரிமையாளர் ரமேஷ்பாபு வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று இரவு வரை சோதனை நடத்தினர். இப்பகுதியிலும் துப்பாக்கி ஏந்திய துணை ராணுவ படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்