தாயிடம் தகராறு செய்த தம்பியை அடித்துக்கொலை செய்த அண்ணன்...
தாயிடம் தகராறு செய்த தம்பியை அண்ணன் அடித்துக் கொன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.;
வில்லியனூர்,
புதுவை வில்லியனூர் அருகே தனிக்குப்பம் கிராமம் மடுகரை ரோடு பகுதியை சேர்ந்தவர் ஆதிலட்சுமி (வயது 72). இவரது மூத்த மகன் வெங்கடேசன் (54), கூலி தொழிலாளி. இவர் திருமணமாகி குடும்பத்துடன் தனியாக வசித்து வருகிறார். இளைய மகன் கல்யாணசுந்தரம் (35). இன்னும் திருமணமாகாத இவர் தாயார் ஆதிலட்சுமியிடன் வசித்து வந்தார்.
கூலி தொழிலாளியான கல்யாணசுந்தரம் மீது போலீஸ் நிலையங்களில் பல திருட்டு வழக்குகள் உள்ளன. மது பழக்கத்துக்கு அடிமையான இவர் அடிக்கடி தனது தாயாரிடம் குடிக்க பணம் கேட்டு தொந்தரவு செய்து வந்ததாக தெரிகிறது.
நேற்று முன்தினம் இரவும் மதுகுடிக்க பணம் கேட்டு கல்யாணசுந்தரம் ஆதிலட்சுமியிடம் தொந்தரவு செய்துள்ளார். இதுபற்றி நேற்று காலை மூத்த மகன் வெங்கடேசனிடம் கூறி அடிக்கடி பணம் கேட்டு தகராறு செய்வதாக கூறி அவர் அழுததாக தெரிகிறது. உடனே வீட்டில் இருந்த கல்யாணசுந்தரத்தை அழைத்து வெங்கடேசன் கண்டித்துள்ளார். அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டதை தொடர்ந்து ஆத்திரமடைந்த வெங்கடேசன், அருகில் கிடந்த தடியால் சரமாரியாக தாக்கியதில் கல்யாணசுந்தரம் திடீரென்று மயங்கி விழுந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
ஆத்திரத்தில் தடியால் அடித்ததில் தம்பி உயிரிழந்ததால் வேதனை அடைந்த வெங்கடேசன், நேராக மங்கலம் போலீஸ் நிலையம் சென்று தம்பியை அடித்து கொன்றது குறித்து போலீசாரிடம் தெரிவித்து சரணடைந்தார். இதை கேட்டு போலீசார் அதிர்ச்சி அடைந்த நிலையில் வெங்கடேசனை கைது செய்தனர்.
தொடர்ந்து வில்லியனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆறுமுகம், மங்கலம் சப்-இன்ஸ்பெக்டர் சண்முக சத்யா மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று கல்யாணசுந்தரத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மதுகுடிக்க பணம் கேட்டு தாயிடம் தகராறு செய்த தம்பியை அண்ணன் அடித்துக் கொன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.